திருநெல்வேலி : அரசு தொழில் நுட்ப தேர்வுகளுக்கு நாளை (1ம் தேதி) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.வரும் நவம்பர் மாதத்தில் நடக்கும் அரசு தொழில் நுட்ப தேர்வுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை (1ம் தேதி) முதல் வரும் 25ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.மனுதாரர்கள் தங்களுக்குரிய ஹால் டிக்கெட்களை அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வுக்கு 7 நாட்கள் முன்பாக நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும். தேர்வுகள் துவங்கும் நாள் பத்திரிக்கைகள் மூலம் தெரிவிக்கப்படும். ஹால் டிக்கெட்கள் மனுதாரர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பபட மாட்டாது.ஓவிய பிரிவு, தையல் கலை பிரிவு, இசை பிரிவு, நடன பிரிவு, அச்சு கலை பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில் நுட்ப தேர்வுகள் நடக்கிறது.தேர்வு கட்டணமாக நடன பிரிவுக்கு கீழ் நிலைக்கு 57 ரூபாய், மேல்நிலைக்கு 62 ரூபாய், இந்திய இசை கூடுதல் செயல்முறைக்கு கீழ் நிலைக்கு 27 ரூபாய், மேல்நிலைக்கு 37 ரூபாய், பிற பாடங்களுக்கு கீழ் நிலைக்கு 37 ரூபாய், மேல்நிலைக்கு 47 ரூபாய் கருவூல ரசீதாக செலுத்த வேண்டும்.இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "கூடுதல் செயலாளர் (தொழில் நுட்ப தேர்வு), அரசு தேர்வுகள் இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை - 600 006' என்ற முகவரிக்கு அசல் கருவூல ரசீது, கல்வி தகுதி சான்றிதழ் நகல், தொழில் நுட்ப கீழ் நிலை சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இதற்கான விண்ணப்பங்களை நெல்லை அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், அனைத்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நாளை (1ம் தேதி) முதல் வரும் 25ம் தேதி வரை பெற்று கொள்ளலாம் என்று மண்டல துணை இயக்குனர் தசரதன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக