மதுரை, ஜூலை 31: அரசுப் பள்ளிகள் இல்லாவிட்டால் இன்றைய தலைமுறைக்கு தமிழ் மொழியே தெரிந்திருக்காது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன் தெரிவித்தார். சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட 6-வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், சமச்சீர் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கினார். அவர் பேசியது: நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதத்தை கல்விக்கென ஒதுக்க வேண்டும். ஏற்கெனவே ஒன்றரை மாத காலமாக எந்த புத்தகத்தையும் படிக்காமல் மாணவர்கள் குழம்பியுள்ளனர். தங்கள் குழந்தைகளின் நிலையை எண்ணி பெற்றோர் மன உளைச்சலில் உள்ளனர். சமச்சீர் பாடத்திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் பேசியது: இன்றைய நிகழ்காலம் என்பது ஊழல்கள் வெளிவரும் காலமாக இருக்கிறது. இன்றைக்கு பிரதமர் மீதே குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.மதுரையில் உள்ள பெரிய பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. பெற்றோர் பெரும்பாலும் தங்களுடைய பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் சேர்த்து வருவதால் இந்த நிலை. ஆங்கிலம் படித்தால் மட்டுமே முன்னேற முடியாது. அதுவொரு மொழி மட்டுமே. தினமும் சிறிது நேரம் அந்த மொழியைக் கற்றுக் கொண்டால் போதும். அரசு மற்றும் ஊராட்சி பள்ளிகள் இல்லாவிட்டால் தமிழ் மொழி இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்காது என்ற சூழல் தற்போது நிலவுகிறது என்றார். மாநாட்டில் கலை இலக்கிய ஆய்வறிக்கையை ப.கவிதா குமார், அமைப்பு செயல்பாட்டு அறிக்கையை அ.கஜேந்திரன், நிதி நிலை அறிக்கையை சி.இராயப்பன் ஆகியோர் வாசித்தனர். கவிஞர் இரா.ரவி, சுவாமிநாதன், மாநில குழு உறுப்பினர் தி.வரதராசன், கே.வேலாயுதம், கோ.சுரேஷ்பாபு, ப.மணிவண்ணன், அ.கார்த்திகேயன், மதுரை நம்பி, ச.விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக