மதுரை:உயர்நிலைப் பள்ளிகளிலும், அறிவியல் பாடங்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிக் கல்வித்துறையில் மேல்நிலை வகுப்புகளுக்கு இயல் அறிவியல், உயிர் அறிவியல் பாடங்களுக்கு, தனித்தனியாக இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், உயர்நிலையில் இந்த நியமனம் கிடையாது.ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் என, தனித்தனி பிரிவுகளுடன் அறிவியல் பாடங்கள் உள்ளன.இயற்பியல் ஆசிரியரால் வேதியியல் பாடங்களை கற்பிக்கும் அளவு, திறனுடன் உயிரியல் பாடங்களை கற்பிக்க இயலாது.
அதேபோல உயிரியல் பாட ஆசிரியர்களால், இயற்பியல், வேதியியல் பாடங்களை திறமையுடன் நடத்த இயலாது. ஆனால், உயர்நிலை வகுப்புகளுக்கு, இவற்றில் ஏதாவது ஒரு அறிவியல் பாட ஆசிரியரை நியமிக்கின்றனர்.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நீண்ட நாட்களாக கூடுதல் அறிவியல் ஆசிரியர்களை நியமனம் செய்ய கோரி வருகின்றனர். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ராஷ்டிரிய மத்யமா சிக்ஷ அபியான் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், கடந்தாண்டு தமிழகத்தில் 200 பள்ளிகளும், இந்த ஆண்டு 344 பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இப்பள்ளிகளுக்கு இயல் அறிவியல், உயிர் அறிவியல் பாடங்களுக்கென, இரண்டு அறிவியல் ஆசிரியர் பணியிடம் உருவாக்கி, நியமனம் செய்துள்ளனர். இதனால், கடந்தாண்டு தரம் உயர்ந்த பள்ளியில், அறிவியல் பாடங்களில் அதிக தேர்ச்சி இருந்துள்ளது.
Source: Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக