சென்னை, அக்.10:
தமிழகத்தில் மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் புதியதாக 710 பள்ளிகள் தொடங்க மத்திய மனித வள மேம்பாட்டு துறை 1153 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 200 மாதிரிப் பள்ளிகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டது. படிப்படியாக அந்த பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கான கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 53 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் பல புதிய பள்ளிகள் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்காக கடந்த ஆண்டு ஒரு செயல் திட்டம் வகுத்து, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையிடம் வழங்கியது.
அந்த செயல் திட்டத்தில் பள்ளிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான செலவுகளையும் குறிப்பிட்டு இருந்தது. அதன் மீதான ஆய்வுகளை மத்திய மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டது. இதையடுத்து, கடந்த மாதம் 14ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு, தமிழக அரசு கொடுத்த திட்ட அறிக்கை மீது சிலவற்றுக்கு மட்டும் அத்துறையின் திட்ட ஒப்புதல் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி தமிழகத்தில் 710 புதிய பள்ளிகள் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஏற்கெனவே உள்ள 1153 இடைநிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கவும், ஆய்வுக் கூட உபகரணங்கள் வாங்க, கணினி அறைகள், நூலகம், கலை மற்றும் கைவினை அறைகள், கழிப்பறை கட்டிடம், குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தவும், ஆசிரியர்கள் விடுதிகள் 91 கட்டவும், 414 பள்ளிகளில் 1035 வகுப்பறைகளை புதுப்பிக்கவும் தேவையான நிதியாக ரூ.782 கோடியே 22 லட்சம் செலவிட அனுமதி அளித்து, மத்திய அரசின் பங்கு 75 சதவீதம் 586 கோடியே 67 லட்சத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய செலவினங்களாக 3550 ஆசிரியர்களுக்குரிய சம்பளம்
127 கோடி, 710 பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆய்வுக் கூட உதவியாளர்கள் 710 பேருக்குரிய சம்பளம்
16 கோடி, பள்ளி மேலாண்மை பயிற்சி அளிக்க, பணியிடைப் பயிற்சி உள்ளிட்ட செலவினங்களுக்காக
756 கோடியே 96 லட்சத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அதில் மத்திய அரசின் பங்காக 75 சதவீதம்
567 கோடியே 72 லட்சம் ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தைப் போல ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தை செயல்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஒப்புதல் அளித்துள்ளது.
நன்றி: தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக