உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.
எதிர்கால உலகை ஆளப்போகிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்களால் சுட்டப்படும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேசமயம், சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 1954ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டது. கடந்த 1925ம் ஆண்டே, ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இந்தியாவின் முதல் பிரதமராகவும், சக்திவாய்ந்த அரசியல் தலைவராகவும் இருந்த நேரு, குழந்தைகளிடம் அளப்பரிய அன்பும், பிரியமும் கொண்டவர். அவரது சிறந்த புகைப்படங்களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.
உலகிலேயே, அதிகளவிலான குழந்தை மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்காக குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் "குழந்தை தொழிலாளர்களாக" உள்ளனர்.
அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காமலும், முறையான தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் துன்பங்களுக்கு சரியான பதில் சொல்வதாக அமையுமா, வருடா வருடம் நடக்கும் குழந்தைகள் தின கொண்டாட்டங்கள்?
ஆள்வோர்களும், அதிகாரிகளும் குழந்தைகளின் நல்வாழ்வு தொடர்பாக விடைகாண வேண்டிய கேள்விகள் எவ்வளவோ உள்ளன! உலகளாவிய அமைப்பான ஐ.நா. சபை, குழந்தைகள் உரிமை மற்றும் நல்வாழ்வு தொடர்பாக பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. உலகின் ஏராளமான நாடுகள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் காகித அளவிலேயே, பேச்சளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
உலகிலேயே எந்தவிதமான வன்முறைக்கும் எளிதாக இலக்காகிறவர்கள் குழந்தைகள்தான். ஆப்ரிக்க நாடுகளின் குழந்தைகள் உட்பட, மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார்கள். அந்த நாடுகளில் வருங்கால தலைமுறைகளே அழிந்து வருகின்றன. குழந்தைகள் சமூகத்தின் மீது செலுத்தப்படும் எந்தவொரு அநீதியும், எதிர்கால உலகின் மீது செலுத்தப்படும் அநீதியே ஆகும். எதிர்கால உலகை அது நிச்சயம் சீரழிக்கும்.
குழந்தைகள் தின கொண்டாட்டங்களில், குழந்தைகளுக்கு விதவிதமாக வேஷமிடுவதும், பல்வேறுவிதமான போட்டிகளை நடத்துவது மட்டுமே நமக்கு திருப்தியை தந்துவிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மேம்படுத்துவதன் பொருட்டே, சிறப்பு விழாக்களும், நிகழ்ச்சிகளும் அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், நமது சமூகத்தில் அவை சம்பிரதாயங்களாக மாறிவிட்டன. அதுபோலத்தான் குழந்தைகள் தினமும் மாறிவிட்டது.
நமது நாட்டின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இந்த உலகின் குழந்தைகளுக்கே, என்று விமோச்சனமும், நல்வாழ்வும் கிடைக்கிறதோ, அன்றுதான் உலகெங்கிலும் உண்மையான குழந்தைகள் தினம் கொண்டாடப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக