பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/08/2011

பொதுத்தேர்வு கட்டணங்களை உயர்த்த அரசு பரிசீலனை : தனித் தேர்வுக்கான கட்டணம் இரட்டிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான பல்வேறு கட்டணங்களை 100 சதவீதம் வரை உயர்த்த, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கான கட்டணம், 100 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.
வரும் கல்வியாண்டில் இருந்து, மாணவர்களின் புகைப்படம் மற்றும் பல்வேறு ரகசிய பாதுகாப்பு குறியீடுகளுடன் கூடிய, புதிய மதிப்பெண் பட்டியலை வெளியிட, தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இருந்த போதும், நடப்பு கல்வியாண்டுக்கான தேர்விலேயே, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போது முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கட்டண உயர்வு விவரம்: இந்நிலையில், தேர்வுகளுக்கான கட்டணங்களை கணிசமாக உயர்த்தி, தமிழக அரசுக்கு, தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது. கடந்த முதல் வாரத்தில் அனுப்பப்பட்ட பரிந்துரையில், "செய்முறைத் தேர்வு கொண்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான கட்டணம் 225 ரூபாயில் இருந்து, 300 ரூபாயாகவும், செய்முறைத் தேர்வு அல்லாத மாணவர்களுக்கு, 175 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாகவும் உயர்த்தலாம்' என, தேர்வுத் துறை பரிந்துரைத்திருக்கிறது.

தனித்தேர்வர்களுக்கான கட்டணம், 85 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாகவும், நேரடி தனித் தேர்வர்களுக்கான கட்டணத்தை 185ல் இருந்து, 300 ரூபாயாகவும் உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை, பள்ளி மாணவர்களுக்கு 115ல் இருந்து, 225 ஆகவும், தனித் தேர்வு மாணவர்களுக்கு 125ல் இருந்து, 275 ஆகவும், அறிவியல் பாடம் இல்லாத தனித் தேர்வு மாணவர்களுக்கு 125ல் இருந்து, 250 ஆகவும் உயர்த்தலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

கட்டண உயர்வு ஏன்? புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல் தயாரிக்க, அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும், இதை சரிக்கட்டவே தேர்வுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்த, தேர்வுத் துறை பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தேர்வுத் துறை வட்டாரத்தினர், வேறு தகவல்களை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது: "எல்காட்' மற்றும் டேட்டா சென்டர் ஆகிய இரு துறைகளும் சேர்ந்து, மதிப்பெண் பட்டியலை தயாரிக்க உள்ளன. புகைப்படங்களை, "ஸ்கேன்' செய்யும் பணியை, "எல்காட்' செய்ய உள்ளது. வெற்று மதிப்பெண் பட்டியல் மட்டும், வெளியில் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது. ஒரு மதிப்பெண் பட்டியலை அச்சிட 5 முதல் 6 ரூபாய் தான் செலவாகும்.

தேர்வெழுதும் மாணவர்களில், 80 சதவீதம் பேருக்கு, அரசு கட்டணச் சலுகை வழங்குகிறது. 20 சதவீதம் பேர் மட்டுமே கட்டணம் செலுத்துகின்றனர். கட்டணச் சலுகை அளிப்பதால் ஏற்படும் வருவாய் இழப்பை, கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் சரிசெய்ய முடியும். மேலும், தற்போதுள்ள கட்டணம், ஆறு ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. கட்டணம் திருத்தி அமைக்கப்படுவதற்கு, இதுவும் ஒரு காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வுத்துறை அனுப்பிய பரிந்துரையை, பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் செயலர் சபீதா ஏற்றுக் கொண்டு, நிதித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், முதல்வர் அனுமதிக்குப் பிறகே, பரிந்துரையின் கதி பற்றி தெரியவரும்.

கட்டணச் சலுகை யார் யாருக்கு? : அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான (அனைத்து பிரிவு மாணவர்களுக்கும்) பொதுத் தேர்வு கட்டணங்கள் அனைத்தையும், தமிழக அரசே ஏற்கிறது.

இந்த பள்ளிகளில், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், தமிழக அரசு நிர்ணயித்துள்ள தேர்வுக் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

மேலும், தனித் தேர்வு மாணவர்களைப் பொறுத்தவரை, அரசு பள்ளிகளில் படித்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் என, அனைவருமே புதிய தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தவிரவும், இக்கட்டண உயர்வு கல்வித் துறைக்கு அதிக லாபத்தை ஒரேயடியாகத் தராது என்றும், கல்விக் கட்டண சீரமைப்புக்கு இது முதல்படி என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக