சிவகங்கை, நவ. 4: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, சிவகங்கையில் வியாழக்கிழமை கொட்டும் மழையில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் நீலமேகம், மாவட்ட முன்னாள் தலைவர் காத்தமுத்து, மாவட்ட முன்னாள் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு செய்ததாக அதிகாரிகளைக் கண்டித்து, போராட்டம் நடத்திய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலாளர் ஜோசப்ரோஸ், மாவட்ட துணைத் தலைவர்கள் அருள், சண்முகம், ஜீவரெத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் ரவி, பூசைத்துரை, இந்திராகாந்தி, மாவட்டப் பொருளாளர் புரட்சித் தம்பி ஆகியோர் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக