சிவகங்கை, டிச. 22: சிவகங்கை ஆசிரியர் சங்கத்தினரின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் பணியிடம் இல்லாமல் உள்ள நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்குதல், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்குதல் கலந்தாய்வுகள் சிவகங்கை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் சில பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை மறைத்து விதிமுறைகளுக்கு முரணாக கலந்தாய்வை நடத்தக் கூடாது என ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவின்பேரில் கலந்தாய்வு வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. வியாழக்கிழமை கலந்தாய்வில் காளையார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த சிறுவூர், சிங்கம்புணரி ஒன்றியம் எருமைப்பட்டி, கண்ணங்குடி ஒன்றியம் சித்தாலூர், திருப்புத்தூர் ஒன்றியம் தேவரம்பூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகள் காட்டப்படவில்லை எனக் கூறி ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. முதன்மைக் கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார். இயக்குநரகம் அறிவித்துள்ள பட்டியலின்படி தற்போது கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் எந்த பள்ளியையும் மறைக்கவில்லை. மறைக்கப்பட்டதாக நீங்கள் கூறும் பள்ளிகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகும் முடிவு எட்டப்படாததால் வெளியே வந்த ஆசிரியர் கூட்டணியினர் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முத்துபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜோசப் சேவியர், மாநில துணைத் தலைவர் நீலமேகம், பொருளாளர் புரட்சித்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக