பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2/29/2012

ஆசிரியர் தகுதித் தேர்வு- ஐயங்களும் தீர்வுகளும்



பாடத் திட்டம் என்ன?
      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டம் இந்த அளவில் இருந்தாலும், விண்ணப்பதாரர்களை சிந்திக்க வைக்கும் வகையில், அதிகளவில் கேள்விகள் இடம்பெற உள்ளன. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களை இறுதி செய்து, அரசின் ஒப்புதலுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது. இதற்கு, அரசு தற்போது ஒப்புதல் அளித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்த விவரங்கள், அரசிதழில்  வெளியான பின், தகுதித் தேர்வு குறித்த அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்; இந்தப் பணிகள் அனைத்தும், 10 நாட்களுக்குள் நிறைவடைய வாய்ப்புகள் இருக்கின்றன என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு எப்போது?
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா, 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.
ஐயங்களும் தீர்வுகளும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, "நெட்' அல்லது, "ஸ்லெட்' எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், "டிஇடி' தேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு;   

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.

இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும்இந்த தகுதித் தேர்வை எழுதலாம்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும்.

வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.

அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும்.

விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள்.

இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது.

இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.
மே மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.
5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.

கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

இந்நிலையில், "தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
தேர்வு முறை

* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள்இரண்டையும் எழுத வேண்டும்.

* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.

* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.

* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
  
  தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை D.T.Ed, முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட்.(B.Ed) படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மொத்தம் 150-க்கு 60% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால், அது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும்.

ஆசிரியராக விரும்புபவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்' (Objective Type) வடிவில் முதல் தாள், இரண்டாம் தாள் என இந்தத் தேர்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.

1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இந்தத் தேர்வில்  பங்கேற்க தகுதிகள்

1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம்பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

2. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.

150 மதிப்பெண்ணுக்குத் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வு 90 நிமிஷங்கள் கொண்டதாக இருக்கும்.

இவையனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.

ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு

 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண்
 2. மொழித்தாள் -1(கற்பிக்கும் மொழி) 30 மதிப்பெண்
 3. மொழித்தாள் -2(விருப்ப மொழி) 30 மதிப்பெண்
 4. கணிதம் 30மதிப்பெண்
 5.சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண்

 இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு

 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும்
          கற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண்
 2. மொழித்தாள் - 1(கட்டாயம்) 30 மதிப்பெண்
 3. மொழித்தாள் - 2(கட்டாயம்) 30 மதிப்பெண்
 4. (அ) கணிதம் மற்றும் அறிவியல்
 (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
 (ஆ) சமூகவியல் -(சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
 (இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால்   போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக