சென்னை: உதவித் துறை அதிகாரிகள் பணியிடங்களில், 2009ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையின் படி, இடங்களை நிரப்ப வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், 2009ம் ஆண்டு நவம்பரில், அறிவிப்பாணையை வெளியிட்டது. 17 உதவித் துறை அதிகாரிகள் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்றது. எழுத்துத் தேர்வுக்கு முன், 2010ம் ஆண்டு, மார்ச், 22ம் தேதி, மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 186 உதவித் துறை அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, 186 பணியிடங்களை நிரப்ப, தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2009ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில், இந்த, 186 பணியிடங்களும் சேர்க்கப்படவில்லை என்றும், புதிய அறிவிப்பாணை இல்லாமல், கூடுதல் இடங்களை நிரப்பக் கூடாது என்றும், மனுக்களில் கூறப்பட்டன.மனுக்களை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2009ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையைத் தொடர்ந்து நடத்தப்படும் தேர்வு என்பது, அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சட்டத் துறையில் 13, டி.என்.பி.எஸ்.சி.யில் நான்கு இடங்கள் உள்ளிட்ட காலியிடங்களுக்குத்தான் தேர்வு இருக்க வேண்டும். இந்த தேர்வின் அடிப்படையில், 186 பணியிடங்களுக்கும் நிரப்ப முடியாது. இருந்தாலும், 2010ம் ஆண்டு டிசம்பர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில், 186 பணியிடங்களையும் நிரப்புவது, அரசைப் பொறுத்தது. இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக