அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 9.50 கோடி பாடப் புத்தகங்கள், 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
நடப்பு கல்வியாண்டில், ஒன்று
முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், முப்பருவக் கல்வி
முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடத்
திட்டம், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத்திற்கான பாடத் திட்டம், இந்த மாதத்துடன் முடியும் நிலையில்,
அக்டோபரில் இரண்டாம் பருவம் துவங்குகிறது. அதற்காக, அரசு மற்றும் அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு
மாணவர்களுக்காக, 9.50 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. இவை,
15ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என, பாடநூல்
கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: மொத்தம், 140 அச்சகங்களில், இரண்டாம்
பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், அச்சடித்து முடிக்கப்பட்டு,
மாவட்டங்களில் உள்ள வினியோக மையங்களுக்கு, நேரடியாக அனுப்பப்பட்டு
வருகின்றன. 15ம் தேதி முதல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கும்
பணிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்வர்.
ஒன்று முதல், ஆறாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், அதிக
பக்கங்களைக் கொண்டதாக இருந்ததால், இரு புத்தகங்களாக பிரித்து
வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம், 70 பக்கங்களாகவும், அதிகபட்சம், 170
பக்கங்களை கொண்டதாகவும், இந்த புத்தகங்கள் இருக்கும்.
தனியார் பள்ளி மாணவர்களுக்காக, 30 சதவீத புத்தகங்கள், விற்பனைக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை, பாடநூல் கழக கிடங்குகளில்
இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை, டி.பி.ஐ.,
வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக அலுவலக கவுன்டர்களில், 15ம் தேதியில்
இருந்து, இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாறு,
கோபால் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக