கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின்
அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை
நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே
எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும்
எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்.,8ம் தேதி உலக
எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன்
சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி,
எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்
என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.
என்ன பயன்:
எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன்
மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை,
பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும்.
எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது
இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.
ஆப்ரிகாவில் குறைவு:
வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில்
எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில் 98
சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு
சதவீதம் 60க்கும் குறைவு. வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள
குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளி செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
இந்தியாவின் நிலை:
2011 சென்சஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது.
இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு
கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4
சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம்.
எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது.
நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க
விஷயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக