பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/05/2013

தொடரும் இலட்சியப்பயணத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -செ.நடேசன் முன்னாள் பொதுச்செயலாளர்



இவன் பாட்டாளி மக்களில் ஒருவன்:இவன் பாட்டாளி வர்க்கத்திற்காக வாதாடியவன்: போராடியவன்என்று தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்ட மாஸ்டர் வி.இராமுண்ணி 20.3-1973ல் மறைந்து 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன.13.7.1909 ல் பிறந்த மாஸ்டர் இராமுண்ணியின் 105 ஆம் ஆண்டு இது

நெல்லிக்காய்களாகச் சிதறிக்கிடந்த ஆசிரியர்களை ஒன்றுசேர்த்து இயக்கமாகச் செயல்பட வைத்தவர் மாஸ்டர் இராமுண்ணி.அவரது இலட்சியங்களை உயர்த்திப் பிடித்து 2.8.1984-ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிஎன்ற புதிய பதாகையின்கீழ் சமரசமற்ற போராளிகளாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் இயக்கப்பயணத்தைத்தொடர்ந்தார்கள்.அவர்கள் மேற்கொண்டுள்ள அந்தப்பாதைமாறாப் பயணம் 29 ஆண்டுகளைக் கடந்து 2.8.2013-ல் 30 ஆம் ஆண்டில் தடம் பதிக்கிறது.

இந்த 30 ஆண்டுகளில் மாஸ்டரின் கொள்கை வழியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெற்றுள்ள வெற்றிகளையும், இன்று ஆசிரியர்கள் முன் எழுந்துள்ள சவால்களையும் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்க வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை ஆசிரியர்கள்முன் எழுந்துள்ளது. இந்தப் பொருத்தமான நேரத்தில் முதுபெரும் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் எழுதி 2002 ஆகஸ்டில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெருமையுடன் வெளியிட்ட இயக்கம் கண்ட நாயகன் மாஸ்டர் இராமுண்ணிஎன்ற நூல் அத்தகைய ஒரு பார்வையை நமக்கு அளிக்கிறது.

இதுவரை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கடந்துவந்த பாதையை மீள்பார்வை செய்திடவும், இனிமேல் கடக்கவேண்டிய பாதையைப் பற்றிய தெளிவான ஞானம் பெறவும் மாஸ்டர் இராமுண்ணியின் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தரும்: தரவேண்டும்.

மாணவப்பருவத்திலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வைத் தனது இதயத்தில் ஏந்தித் தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற போராளியாகத் தனது பொதுவாழ்வைத் துவக்கியவர் மாஸ்டர் இராமுண்ணி .இந்த ஈடுபாடு இயல்பாகவேநாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் சேவைசெய்யவேண்டும்என்ற உணர்வை அவரது சிந்தனையில் ஏற்படுத்தியிருந்தது .அதுதான் அவரை ஆசிரியர் பணியிலும் ஈடுப்ட வைத்தது.

தன்னைப்போலவே சுதந்திரப்போராட்டத்தில் சிறைசென்று அதன்பின் ஆசிரியர் பணியேற்றவர்களோடு இணைந்து கல்விநலன், மாணவர்நலன் ஆசிரியர்நலன், தேசநலன் ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு ஆசிரியர் இயக்கத்தைத் துவக்கினார்.நெல்லிக்காய்களாகச் சிதறிக்கிடந்த ஆசிரியர்களுக்கு இயக்க உணர்வூட்டி, ஒற்றுமைப் பதாகையின்கீழ் அணிதிரட்டி,அவர்களை உரிமைகளுக்காகப் போராடும் போர்வாட்களாகவும், சமுதாயத்தின் நலன் காக்கும் கேடயங்களாகவும் மாற்றியமைத்தார்.

மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தஒரு இயக்கமும் வெற்றிபெற இயலாது என்ற அவரது தொலைநோக்குப் பார்வை கிராமத்து ஆசிரியரைக் கிராமமக்களின் தோழனாகவும், நண்பனாகவும், விவசாயிகளுக்கு உதவும் செயல்வீரனாகவும் விளங்க வலியுறுத்தியது.ஒன்றுபட்ட சக்திதான் போராட்டத்திற்கு அடித்தளம்: போராட்டம்தான் கோரிக்கைகளை வென்றெடுக்கும் களம்’ ‘போராட்டமின்றி யாராட்டத்தாலும் அது நிறைவேறாதுஎன்று ஆசிரியர்களுக்குக் கற்றுத்தந்தார்.

மாஸ்டர் இராமுண்ணியின் மறைவுக்குப் பின்னர், ஆசிரியர்களின் நலன்களைக் காத்திட ஒன்றுபட்ட இயக்கத்தில் ஆசிரியர்கள் மேற்கொண்ட ஒருஜனநாயகப் போராட்டதின் விளைவாக நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசமேதும் கிடையாதுஎன்ற இலட்சிய ஆவேசத்தோடு 2.8.1984-ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிஎன்ற புதிய பதாகையின்கீழ் பயணம் துவங்கியது. ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் இலட்சியப் பயணத்திற்கு என்றும் வழிகாட்டியாக விளங்குவது மாஸ்டர் இராமுண்ணியின் இலட்சியங்களே!

2.8.1984 – இந்தநேரத்தில்தான் தமிழ்நாட்டில் நான்காம் ஊதியக்குழு அமைக்கப்பட்டிருந்தது. 1970-ல் அகில இந்திய அளவில் ஊதியவிகிதங்களில் மூன்றாம் நிலையில் இருந்த தமிழ்நாட்டு ஆசிரியர்களும்,அரசுஊழியர்களும் இந்தியாவின் கடைசிநிலை என்றபரிதாப எல்லைக்குத் தள்ளப்பட்டிருந்ததும் இந்த நேரத்தில்தான்.


இந்தவீழ்ச்சியிலிருந்து மீளவும், ஒய்.பி.சவாண் தலைமையிலான எட்டாவது நிதிக்குழு பரிந்துரைத்தபடி அகில இந்திய சராசரி ஊதியமாவது பெற்றிடவும் தமிழ் நாட்டு ஆசிரியர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய மாபெரும் பொறுப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணீமுன் இருந்ததும் இந்த நேரத்தில்தான். தமிழ்நாடு முழுவதும் ஊதியவிளக்கக் கூட்டங்களை நடத்தி 1970 முதல் 1984 வரையிலான 14 ஆண்டுகாலத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்புக்களை ஆதாரங்களுடன் விளக்கி ஒருபுதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடைமையைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகச் சரியாகச்செய்தது.

1985 மே-5 ல் சென்னையில் காமரஜர் அரங்கில் நடத்திய முதல்மாநில மாநாட்டில் அகில இந்திய சராசரி ஊதியம்என்ற கோரிக்கையைப் பிரகடனம் செய்தது. அன்றைய ஊதியத்தில் குறைந்தபட்சம் 25% உயர்வை அடைந்திடத் தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்கங்களின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்தது.26.5.1985ல் நான்காம் ஊதியக்குழுவில் வெறும் 7% உயர்வு மட்டுமே அறிவிக்கப்பட்டது.ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். அவர்களது கோபங்கள் 4 சங்கங்களின் ஜாக்டா. ஆகவும், பின் 44 சங்கங்களின் ஜேக்டீஆகவும் வடிவெடுக்க ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதர்சமாக விளங்கியது. அகில இந்திய சராசரி ஊதியம்என்ற முதல் மாநாட்டின் பிரகடனம் ஜேக்டீ யின் உயிர்மூச்சானது. 1985 நவம்பரில் 15,000 சகோதரிகள் உட்பட 65,000 ஆசிரியர்கள் தீபாவளித் திருநாளிலும் சிறையிருந்த வரலாற்றை உருவாக்கியது.ஆனால் எதிர்பார்த்த பயன்கிட்டவில்லை. ஜேக்டீ தொய்வடைந்தது.


மத்திய அரசின் நான்காம் ஊதியக்குழு 1.1.1986 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது .மத்திய அரசில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட உயர்ஊதிய விகிதங்கள் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின. இதற்கு வடிவம் தரும்வகையில் 1988 மார்ச் 5,6 தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய இரண்டாம் மாநிலமாநாடு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்என்றகோரிக்கையைப் பிரகடனம் செய்தது. ஜேக்டீயை மீண்டும் புத்துயிர் பெறவைத்தது. அரசுஊழியர்களையும் இணைத்து ஜேக்டீ அரசு ஊழியர்களின் பேரமைப்புஉருவானது. காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம்-அதன் உச்ச கட்டமாக சென்னைமாநகர முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. மகத்தான ஒற்றுமையின் விளைவாக 1.6.1988 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது. 40 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுக் கிடந்தவர் களுக்கு வரலாற்றில் முதன்முறையாக இந்த வெற்றி கிடைத்திட வழிவகுத்தது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முதல் இருமாநாடுகளின் கொள்கைப் பிரகடனங்களும், ஒன்றுபட்ட போராட்ட நடவடிக்கைகளுமே!

ஆசிரியர்களுக்காக்வே மத்திய அரசால் அமைக்கப்பட்ட சட்டோபாத்யாயா குழு’ 1984-ல் அளித்த பரிந்துரைகளையும், 1996 வரையிலும் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டு மத்திய அரசு 12ஆண்டுகள் வஞ்சித்த வரலாற்றையும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிஏடு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது.இந்த ஊதியத்தைப் பெற்றெ தீரவேண்டும் என்ற உறுதியைத் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆனால், மத்தியஅரசின் ஐந்தாம் ஊதியக்குழு நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்டபோது ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிசீலிக்கும் அதிகாரமே அக்குழுவுக்கு அளிக்கப்படவில்லை. இதைச்சுட்டிக்காட்டி டிட்டோஜேக் தலைவர்களை புதுடில்லிக்கு அழைத்துச் சென்று நீதிப்தி இரத்தினவேல் பாண்டியன் குழுவுக்கு ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் வழங்கப்படவும், சட்டோபாத்யாயா பரிந்துரைகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் ஊதியம் அமைந்திடவும் வழிவகுத்தது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. தமிழ்நாட்டில் இது மறுக்கப்பட்டபோது டிட்டோஜேக் மூலம் போராட்ட அறைகூவல் விடுத்து உரிமைப்போரில் ஆசிரியர்கள் வென்றார்கள்

ஆசிரியர்சங்கம் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புஇயக்கம்’-என்ற தீப்பொறியான ஒரு தீர்மானத்தை 1937-ல் தனது தலைமையில் மாநாட்டில் நிறைவேற்றியவர் மாஸ்டர் இராமுண்ணி. மெக்காலே கல்வித்திட்டம் என்ற ஏகாதிபத்தியக் கல்விமுறைக்கு மாற்றாக இந்தியநாட்டின் கல்விக்கொள்கைகள் அனைவருக்கும் கல்வி அளிப்பதாக, மக்கள்நலன் சார்ந்ததாக, அறிவியல்பூர்வமானதாக, ஜனநாயகக் கல்விமுறையாக மலரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்தவர் மாஸ்டர் இராமுண்ணி.


இங்கிலாந்துநாட்டின் தேசியஆசிரியர் யூனியன்’ (NATIONALNATIONAL UNION OF TEACHERS) பற்றியும், அமெரிக்க ஐக்கியநாடுகளின் புகழ்பெற்ற இருதொழிற்சங்கங்களில் ஒன்றான அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனத்தில்’ (aaaAMERICAN FEDERATION OF LABOURERS) ஆசிரியர் யூனியன் இணைந்திருப்பதையும், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக இச்சம்மேளனத்தைசார்ந்த தொழிலாளர்கள் போராடிவருவதையும், அறிந்து வியந்தவர் மாஸ்டர் இராமுண்ணி. அதேபோன்று சோவியத் கல்வி முறையும் ஆசிரியர் இயக்கமும் எங்களை மிகவும் கவர்ந்ததுஎன்றார் அவர். அவரது உலகளாவிய விரிந்த பார்வையும், சிந்தனையும் அகில இந்திய ஆசிரியர் அமைப்பு‘,’ உலக ஆசிரியர் அமைப்புஎன்றதிசையில் சிறகடிக்கச் செய்தன. அதற்கான முயற்சியில் அவர் இறங்கியபோது மாஸ்டர் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். அவர் தங்கள் நாடுகளுக்கு வந்தால் ஆசிரியர்களை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக மாற்றிவிடுவார்என ஏகாதிபத்திய அரசுகள் அவருக்கு விசா தர மறுத்துவிட்டன.

1985 –ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கையும் அதன் பின்னணியாக அமைந்த புதியபொருளாதாரக்கொள்கையும் தனியார்மயம், தாராளமயத்தின் மூலம் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும் பேராபத்துக்களை உருவாக்கின. மாஸ்டரின் கொள்கைவழி வந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1986-ல் திருச்சியில் நடத்திய புதிய கல்விக்கொள்கைக் கருத்தரங்கில்இந்த ஆபத்துக்களை மிகச்சரியாக இனம்கண்டு ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. புதிய கல்விக் கொள்கையின் விளைவுகள் பேராபத்தாக உருவான காலகட்டத்தில் 1992 மார்ச் 21, 22-ல் சென்னையில் மூன்றாம் மாநிலமாநாட்டை நடத்தி ஆசிரியர் இயக்கங்களின் நாடுதழுவிய ஒற்றுமை கட்டப்படவேண்டும்என்ற இலட்சியத்தைப் பிரகடனம் செய்தது. 1994 ஏப்ரல் 4-ல் புதுதில்லியில் கல்வியின் களத்தில் அரசின் பாத்திரம்’ (ROLE OF STATE IN THE FIELD OF EDUCATION’) என்ற அகில இந்தியக் கருத்தரங்கை நடத்தி நாடுதழுவிய ஆசிரியர் இயக்கங்களின் ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தது.


1997 மார்ச் 15,16-தேதிகளில் சென்னையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய அகிலஇந்தியப் பள்ளிஆசிரியர்களின் சிறப்புமாநாடு (ALL INDIA SCHOOL TEACHERS’ CONVENTION) ‘பள்ளிஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு’ C.C.S(C.C.S.T.O) உருவாக வழிவகுத்தது. 29இலட்சம் ஆசிரியர்களைக்கொண்ட 12 மாநிலங்களின் 15 ஆசிரியர் இயக்கங்கள் இணைந்த இந்த அமைப்பு கொல்கத்தாவில் 2000 ஆகஸ்டு 11,12,13 –ல் நடைபெற்ற இரண்டாம் அகில இந்திய மாநாட்டில்maama ‘இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு’ (SCHOOL TEACHERS’ FEDERATION OF INDIA’) என்ற போர்குணம் மிக்க அகில இந்திய அமைப்பாக உருவானது. ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வில் செயல்படும் ஃபிஸே(FISE) என்ற உலக அமைப்பில் இணைந்து செயல்படுகிறது. இவ்வாறு மாஸ்டர் இராமுண்ணியின் கனவை நனவாக்கியுள்ளது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


வேலைவாய்ப்பகப் பதிவு முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனம், பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி-வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்விக்குத் தனி இயக்ககம், நடுநிலைப் பள்ளித் தலமை ஆசிரியர்களுக்கு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணிவாய்ப்பு, ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு முறைமூலம் ஆசிரியர் மாறுதல் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வென்றெடுத்த கோரிக்கைகள் பல. மாஸ்டர் இராமுண்ணியின் வழிநின்று பெற்றுள்ள வெற்றிகளைப் பட்டியலிடும்போதே போராடிப்பெற்ற வெற்றிகளைப் பறிக்கும் வகையிலும், புதிய ஆபத்துக்களை உருவாக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் நடவ்டிக்கைகள் சவால்களாக அமைந்து வருகின்றன.

மத்தியில் ஆண்ட பி.ஜே.பி கூட்டணியும், ஆளும் காங்கிரஸ் கூட்டணியும் பன்னாட்டு நிதிநிறுவனம், உலக வங்கி. உலக வர்த்தக நிறுவனம் ஆகியவற்றின் கட்டளைகளை ஏற்று, பன்னாட்டு மூலதனக் கம்பெனிகள் மூலம்,ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவைசெய்து வருகின்றன. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரால் இலாபம் கொட்டிக்கிடக்கும் நமது பொதுத்துறை நிறுவனங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் புகுந்து கொள்ளையடிக்க அனுமதித்து வருகின்றன. இந்தியத் தொழில்களும், விவசாயத்துறையும் அழிவின் எல்லைக்கே சென்றுகொண்டிருக்கின்றன. கல்வியும் இதற்கு விதிவிலக்காக இல்லை.

மத்திய அரசு தனது மக்கள்விரோதப் பொருளாதாரக் கொள்கைகள்மூலம் விண்ணைத்தொடும் விலைவாசி, வேலைவாய்ப்பின்மை, அதலபாதாளத்தில் வீழும் நாணயமதிப்பு, மானியங்கள்வெட்டு என நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஏழைஎளியோரின் வாழ்வோடு விளையாடிவருகிறது. அரசுஊழியர்கள் ஆசிரியர்களைத் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டதின் கீழ் அம்பாணிகளிடம் அடகு வைக்கிறது. 80% என அகவிலைப்படி உயர்ந்தபோதும் 50%ஐ அகவிலை ஊதியமாக அறிவிக்கமறுக்கிறது. அடுத்த ஊதியக்குழு அமைக்கவேண்டிய் காலம் வந்துவிட்டபோதிலும் மவுனம் காக்கிறது கல்வியில் பன்னாட்டுப்பல்கலைக்கழகங்கள் கொள்ளையிட வாயிலைத்திறந்துவைத்துக் காத்திருக்கிறது.

மாநில அரசோ ஆசிரியர்களுக்கான ஊதியமுரண்பாடுகளைச் சரிசெய்வதில்- வகுப்புக்கொரு ஆசிரியர் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி.அனைத்துக் காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்றதனது உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தாமல் தமிழ் நாட்டில் தமிழுக்கே பள்ளிகளில் இனி இடம் இல்லை என்ற திசை நோக்கி ஆங்கிலக்கல்விக்கு ஆலவட்டம் சுற்றுகிற்து.

மத்திய மாநில அரசுகளின் இந்தக் கொடூரமான தாக்குதல்களை முறியடிக்கவேண்டிய பொறுப்பும்,கடமையும் இன்று ஆசிரியர்கள் முன் எழுந்துள்ளது. இதற்கு அனைத்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஒற்றுமை மட்டுமின்றி மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரின் விரிவடைந்த ஒற்றுமை உருவாகவேண்டும்.

மத்திய மாநில அரசுகளோ தாராளமயம். தனியார்மயம், உலகமயம் அகியவற்றின் தாக்குதல்களால் நிலைதடுமாறிப் போயிருக்கின்ற போராட்ட உணர்வு மழுங்கிப் போய் நிற்கின்ற மக்கள் விழித்தெழமாட்டர்கள் எனக்கனவு காண்கிறது.

மரம் சும்மா இருந்தாலும் கற்று அதைச் சும்மா இருக்கவிடாது. ஆம். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் க்ட்டணி தனது 30-ஆம் ஆண்டின் இயக்கப்பயணத்தில் எச்சரிக்கை விடுக்கிறது.

ஒய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல: தியானம்.
பின் வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.

எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்
(நன்றி: கவிதை : பசுவய்யா) .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக