நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்,2 பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த பட்ச தேர்ச்சி
மதிப்பெண் பெறும் வகையில் கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் தற்போது பயிற்சி
பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொது தேர்வு தேர்ச்சி
விகிதத்தை மட்டும் குறி வைத்து தனியார் பள்ளிகள் ஆண்டு தோறும் அதிகரித்து
வருகின்றன. சில ஆண்டுகளாக இந்த மாவட்ட மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக பொது
தேர்வில் மாநில அளவில் ராங்க் பெறுகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக
மாவட்ட அரசு பள்ளிகள் தரம் உயர்த்த கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்தி
வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில் அரசு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
இலக்கு, அரசு பள்ளி மாணவர்கள் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்று
தேர்ச்சி பெறுவதற்கு தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில்
கற்பிப்பது போன்ற யுக்திகளை பின்பற்றாமல் இயல்பாக மாணவர்களை தேர்ச்சி
பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்
குறித்து தொடர் பயிற்சிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஆசிரியர்களுக்கே
கற்பிக்கும் முறைக்கான தேர்வு, பயிற்சியும் வழங்கப்படுகிறது. அரசு
பள்ளிகளில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த தலைமை ஆசிரியர்கள், முதுகலை
ஆசிரியர்களை கொண்டு இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் வினாத்தாள்
தயாரிக்கும் முறை, அரசு பள்ளிகளில் மாணவனின் அணுகுமுறை எப்படி இருக்கும்,
கற்றுக்கொள்வதில் உள்ள பிரச்னை, குடும்ப சூழல் எந்தளவுக்கு பாதிப்பை
ஏற்படுத்துகிறது என்பது குறித்து சில அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு
திறன் குறைந்த மாணவர்களை கண்டறிவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் கூறுகையில்,
‘‘தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்
பெறும் மாணவர்களை அந்தந்த பாட ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்கள் குறைந்த
பட்சம் பாஸ் மார்க் பெற என்ன வழி என்பதை கையாள வேண்டும். மாணவருக்கு
பிடித்தமான பாடத்தில் அவர்களை பயிற்றுவிக்கவேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட சில பாடங்களில்
100 சதவீத தேர்ச்சி கொடுத்த 412 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அத்தகைய
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு தான் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி
வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு ஆசிரியரால் சாதிக்கமுடியும் போது அதற்கு
இணையான தகுதி படைத்த மற்ற ஆசிரியர்களால் முடியும். அதற்கு
ஆசிரியர்களுக்கும் போதிய பயிற்சி அவசியம். அதை உணர்ந்தே இந்த திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக