போலி
சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து மாநகராட்சி பள்ளிகளில்
ஆசிரியர்களாக உள்ள ஒன்பது பேர் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட
உள்ளனர். ஓரிரு நாளில் அவர்கள் கைது செய்யப்படுவர் என, மாநகராட்சி
வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை மாநகராட்சி பள்ளியில்
பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் போலி சான்றிதழ் மூலம் பணியில்
சேர்ந்திருக்கும் அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
இதுகுறித்து எழுந்த புகாரை தொடர்ந்து மாநகராட்சி கல்வி துறை
அதிகாரிகள் விசாரித்தனர். இதில், முதல்கட்டமாக சந்தேக வலையில் இருந்த
76 ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில்,
ஒன்பது பேரின் சான்றிதழ்கள் போலி என, உறுதியானது.
இந்த ஒன்பது பேரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ் முதல்
ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் வரை பல்வேறு கட்டங்களில் போலி
சான்றிதழ்களை வழங்கியுள்ளனர். ஐந்து ஆசிரியர்கள், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மறுதேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி
பெறாமல், தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
பிளஸ் 2
தேர்வில் நான்கு ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், தேர்ச்சி
பெற்றதாக போலி சான்றிதழ் வழங்கிஉள்ளனர். ஆறு ஆசிரியர்கள் ஆசிரியர்
பட்டய பயிற்சி பெற்றதாக வழங்கியுள்ள சான்றிதழ்கள் போலியானவை.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் கல்வி அதிகாரி ரவிச்சந்திரன்
மூலம் கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸ் கமிஷனரிடம் புகார்
அளித்தது.
அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் ஒன்பது பேர் மீதும்
வழக்கு பதிவு செய்து, ஓரிரு நாளில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, அவர்களுக்கு நோட்டீஸ்
வழங்கி, பணி நீக்கம் செய்ய முடிவு செய்து, அதற்கான பணியில் மாநகராட்சி
இறங்கியுள்ளது. ஒன்பது போலி ஆசிரியர்கள் பெயரை மாநகராட்சி
அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
தொடர் விசாரணையில் போலி
சான்றிதழ் ஆசிரியர்கள் இன்னும் சிலர் சிக்குவர் என,
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது சிக்கியுள்ளவர்கள்
அனைவரும், 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டுக்குள் பணியில் சேர்ந்தவர்கள்.
இவர்கள் உயர் அதிகாரிகளுக்கு கணிசமான தொகையை லஞ்சமாக கொடுத்து
பணியில் சேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால்
அப்போது மாநகராட்சி கல்வி துறையில் யார், யாரெல்லாம் அதிகாரிகளாக
பணிபுரிந்தார்களோ அவர்களும் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக