புதுடில்லி: "தனியார் பொறியியல் மற்றும்
மருத்துவ கல்லூரிகள், நிதி நிறுவனங்கள் போல் செயல்படுகின்றன. மாணவர்
சேர்க்கைக்காக, மாணவர்களிடமிருந்து, நன்கொடை என்ற பெயரில், பல கோடி ரூபாயை,
வசூலிக்கின்றன. இது, சட்டவிரோதமான செயல். இதை தடுத்து நிறுத்துவதற்கு,
மத்திய அரசு, தகுந்த சட்டம் இயற்ற வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில்
உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று, மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க,
இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில்
மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய, பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நம்
நாட்டில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், காளான்கள் போல்
அதிகரித்து விட்டன. இதனால், கல்வியின் தரம் குறைந்து விட்டது. தனியார்,
பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், மாணவர்களை சேர்ப்பதற்காக, பல கோடி
ரூபாயை, நன்கொடையாக, அவர்களிடமிருந்து வசூலிக்கின்றன.
தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை
மாணவர்களுக்கு, சேர்க்கை மறுக்கப்படுகிறது. போதிய கட்டமைப்பு வசதிகள்
இல்லாவிட்டாலும், பல தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள்,
ஆண்டுதோறும், தங்களின் சீட்டுகளை அதிகரிப்பதற்கு விண்ணப்பிக்கின்றன.இந்த
தனியார் கல்லூரிகள், மாணவர் நலனுக்காக செயல்படாமல், தங்கள் சொந்த நலனுக்காக
செயல்படுகின்றன.
கல்லூரிகள் நிதி நிறுவனங்கள் போல்
செயல்படுவதால், கல்வியின் தரம் குறைந்து வருகிறது.நன்கொடை என்ற பெயரில்,
மாணவர்களிடம் நிதி வசூலிப்பது, சட்ட விரோதமான நடவடிக்கை. கல்லூரிகளின் இந்த
நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசு, தகுந்த சட்டமியற்ற
வேண்டும்.
சட்ட விரோத செயல்: மத்திய சுகாதார அமைச்சகம்,
சி.பி.ஐ., மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஆகியவை, இந்த சட்ட விரோத செயல்
குறித்து விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்,
தனியார் சுயநிதி கல்லூரிகள், மாணவர் நிதி நிறுவனங்களாக மாறுவதை தடுக்க
முடியாது. இவ்வாறு, நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக