படப்பை:
பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில், புதிய
வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவில் துவங்கப்படவுள்ளன.
பள்ளி
வகுப்பறையில் கவனச் சிதறல், சக மாணவர்களால் தொல்லை, பாடம் கற்பதில்
நெருக்கடி, ஆசிரியர்களுடன் இணக்கம் இன்மை. உடல் வளர்ச்சியை புரிந்து கொள்ள
முடியாமல் மிரட்சி, தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களால், பள்ளி மாணவ,
மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழல்களை கடந்து வரமுடியாமல்
தற்கொலை முயற்சி போன்ற கொடூரமான முடிவுகளை எடுக்கின்றனர். இதைத் தடுக்கும்
வகையில், பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.
அரசு பள்ளிகளில் உயர்நிலை மற்றும்
மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ரீதியாக
ஆலோசனை வழங்கி படிப்பில் கவனத்தை திருப்பும் திட்டம்தான் அது.
புதிய திட்டப்படி குறிப்பிட்ட கால
அவகாச இடைவளியில் உளவியல் நிபுணர் குழு பள்ளிகளில் நேரடியாக மாணவர்களை
சந்தித்து அவர்களின் பிரச்னைகளை அறிந்து உரிய அறிவுரை வழங்கும். இதற்காக
உளவியல் நிபுணர்களை தேர்வு செய்யும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை
தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தை அமல்படுத்த கல்வி
மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம்,
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில், உளவியல்
ஆலோசனை வகுப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது.
குழு அமைப்பு
இந்த திட்டத்தில் ஆலோசனை
வழங்கும் குழுவில் ஓர் உளவியல் நிபுணர், ஓர் உதவியாளர் நியமிக்கப்படுவர்.
இவர்கள், பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவியரை சந்திக்க உள்ளனர்.
இதற்கு வசதியாக பிரத்யேக வேன் தயாராகி வருகிறது. நிபுணர்கள், குறிப்பிட்ட
கால இடைவெளியில் பள்ளிகளில் மாணவ, மாணவியரை சந்தித்து பொதுவான ஆலோசனை
வகுப்புகளை நடத்துவர். தனிப்பட்ட ரீதியிலும் ஆலோசனை வழங்குவர்.
என்ன நடக்கும்?
இந்த வகுப்பில் கூற வேண்டிய ஆலோசனை விவரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரமாவது:
-
தேர்வு பயத்தை போக்குதல்
தேர்வு நேரத்தில் உடல்நிலையை பராமரித்தல்
உடல் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றம் சம்பந்தமான மன அழுத்தத்தை போக்குதல்
தற்கொலை எண்ணத்தை தவிர்த்தல்
தாழ்வு மனப்பான்மையை போக்குதல்
மாணவ, மாணவியரின் பொதுவான சந்தேகங்களை போக்குதல்
இந்த விவரங்கள் குறித்து, ஆலோசனை வழங்கப்படும். தேவைப்பட்டால், தொடர் பயிற்சி வழங்க குழு பரிந்துரை செய்யும்.
வகுப்பு எப்போது?
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, கூறியதாவது: "காஞ்சிபுரம் மாவட்ட
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வகுப்புகளை விரைவில் துவங்க உள்ளோம். இதற்காக,
சென்னையில் பிரத்யேக வாகனம் தயாராகி வருகிறது. உளவியல் ரீதியாக ஆலோசனை
வழங்க நிபுணர்களை நியமிக்கும் பணியும் துவங்கி உள்ளது. இந்த பணி
முடிந்தவுடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு
உளவியல் ரீதியான ஆலோசனை வகுப்புகள் தொடங்கப்படும்." இவ்வாறு, சாந்தி
கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக