நாமக்கல்: பள்ளி வசதி இல்லா குடியிருப்பு
பகுதிகளில் உள்ள குழந்தைகள், பாதுகாவலரோடு பள்ளி வந்து செல்லும்
திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 217 குழந்தைகளுக்கு 44
வழித்துணையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து
குழந்தைகளும் கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில் இலவச கட்டாய கல்வி உரிமை
சட்டப்படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி வசதி இல்லாத தொலைதூர,
மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட குடியிருப்பு பகுதிகளில்
உள்ள குழந்தைகள், மலைப்பகுதி, அடர்ந்த காட்டுப்பகுதி, பள்ளி கட்டிட இடவசதி
இல்லாத பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் குழந்தைகள், பாதுகாப்பாக
பள்ளிகளுக்கு வந்து செல்ல வசதி செய்து கொடுக்க வேண்டியது அவசியம்.
அதன் அடிப்படையில் கோவை,
தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தேனி,
நீலகிரி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 320
குடியிருப்புகளில் உள்ள 4,483 மாணவ மாணவியருக்கு பள்ளி செல்ல சிரமம்
உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய மாணவர்கள், பாதுகாவலரோடு
பள்ளி வந்து செல்ல வசதி ஏற்படுத்திட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளி வசதி இல்லாத தொலைதூர, மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட
மலைப்பகுதி குடியிருப்புகளில் உள்ள ஆறு முதல் 14 வயதுடைய பள்ளி வயது
குழந்தைகள், பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள சிறப்பு கவனம்
தேவைப்படும் குழந்தைகள் மற்றும் இல்லம் சார்ந்த கல்வி தேவைப்படும் சிறப்பு
கவனம் தேவைப்படும் குழந்தைகள் தேர்வு செய்யபட்டுள்ளனர்.
ஒரு வழி துணையாளருக்கு அதிக
பட்சமாக ஐந்து மாணவர்கள் என்ற அளவில் பள்ளி அமர்த்தி ஒரு மாணவருக்கு 300
வீதம், பத்து மாதங்களுக்கு 3,000 ரூபாய் என்ற அளவில், ஓர் ஆண்டுக்கு 15
ஆயிரம் ரூபாய்க்குள் செலவை மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை
பகுதியில் 217 குழந்தைகளுக்காக 44 வழித்துணையாளர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள், அவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கும்,
பள்ளி முடிந்த பின் வீட்டுக்கும் அழைத்துச் சென்று விடும் பணியை
வழித்துணையாளர்கள் மேற்கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக