மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு குறுக்கிடுவதையடுத்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது.
விடைத்தாள் மதிப்பீட்டில் இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளொன்றுக்கு இவர்கள் 30 விடைத்தாள்களை மதிப்பீடு செய்தால் 4 நாள்களில் மதிப்பீடு செய்து முடித்து விடலாம் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது:
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் அந்தந்த மதிப்பீட்டு மையங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் எடுத்துச் செல்லப்பட உள்ளன. பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பெரும்பாலும் ஏப்ரல் 14, 15-ஆம் தேதிகளில் நிறைவடையும். அதன் பிறகு இரண்டு நாள்கள் கழித்தே இந்த மதிப்பீட்டு முகாம்களில் பணிகள் முடிவடையும்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களுக்கான பூர்வாங்கப் பணிகள் 2 அல்லது 3 நாள்களுக்கு நடைபெறும். எனவே, ஏப்ரல் 20-தேதிக்குப் பிறகு மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாக ஒரு நாளும், இடையில் பயிற்சிக்காகவும் ஆசிரியர்கள் செல்ல வேண்டியிருக்கும். பயிற்சிக்குச் செல்லும் தேதிகளை தேர்தல் ஆணையத்திடம் இருந்து கேட்டுள்ளோம். கிடைத்ததும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான தேதிகள் இறுதி செய்யப்படும்.
விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 26-க்குப் பிறகு தொடங்கினால் கூட, மே 1-ஆம் தேதிக்குள் முடித்துவிடலாம். இந்தப் பணியில் ஒரு பள்ளிக்கு 5 ஆசிரியர்கள் வீதம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக