5/30/2014
50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு
50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு ஆங்கில வழிக்கல்வியை கடந்தாண்டு தொடங்கியது. இதில், கடந்தாண்டு முதல் வகுப்பு, 6-ஆம் வகுப்புகளில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க கட்டாயமாக்கப்பட்டது. மேலும், மூன்று ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டது. இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் கடந்த ஆண்டு விடுபட்டத் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கிட தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களுக்கு கீழ் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடமும் இதைச் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஒன்றியத்தில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் மட்டும் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசியர்களிடம் ஆங்கில வழிக் கல்வி தொடங்க ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில் இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் 50 மாணவர்களும், அதற்கும் அதிகமாக மாணவர்கள் இருந்தால் அந்தப் பள்ளிகலில் கட்டாயம் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கிட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, 50 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் தொடக்கப் பள்ளிகளில் அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் விரும்பினால் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கி கொள்ளவும் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக