அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் செயல்படுகின்றன. கடந்த மார்ச் 6ம் தேதி "இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகிய சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, பல ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:"ஆசிரியர்களை ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொது செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலதலைவர் அண்ணா மலை ஆகியோர் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்களாக உள்ளனர். ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிப்படி, அவர்கள் சங்கங்களின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருக்க முடியாது; அவர்களை நன்னடத்தை விதிகள் எதுவும் கட்டுப்படுத்தாது. எனவே, அவர்கள் தலைமையில் செயல்படும் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; அச்சங்கங்களை மாவட்ட, மாநில அளவிலான எவ்விதபேச்சு வார்த்தைக்கும் அழைக்க கூடாது" என, கூறப்பட்டிருந்தது.
இக்கடிதம் தொடர்பாக அரசு துணை செயலர் செல்வராஜ், தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான புகார் மனு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனு மீதான புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் 15 நாட்களுக்குள் "ஆன்-லைன்" மூலம் தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார்.அரசின் இந்நடவடிக்கை, ஆசிரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக