விருதுநகர்: "பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பாடகால அட்டவணையை ஆசிரியர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். நவீன கற்பித்தல் சாதனங்களை பயன்படுத்தி, எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி பாடங்களை நடத்த வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி வகுப்பறைகளில், மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது. மீறினால், தமிழ்நாடு அரசுப்பணியளர் சட்டப்படி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், ஆசிரியர்களின் அறைகளில் மொபைல்போன் பயன்படுத்த தடையில்லை. வகுப்பிற்கு செல்லும்போது அதை அங்கேயே அவர்கள் வைத்துவிட்டுச்செல்ல வேண்டும். தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பாட குறிப்பேடுகளை சரியாக வைத்திருக்க வேண்டும். அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆசிரியர்கள், மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச சமீபத்திய நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தொடர் மதிப்பீடு தேர்வு தொடர்பான, செய்முறைகளை, பள்ளியில் வைத்தே மாணவர்கள் செய்ய வேண்டும். வீட்டில் வைத்து பெற்றோர் செய்து தரக்கூடாது. அனைத்து வகுப்பறைகளையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை, சீரான இடைவெளியில் நடத்தி, பள்ளி மேம்பாட்டிற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்க வேண்டும். ஆகஸ்ட் வரை அரசின் பழைய பஸ் பாஸை மாணவர்கள் பயன்படுத்தலாம் என உத்தரவுவந்துள்ளது.
எனவே, சீருடை அணிந்த மாணவர்கள், பாஸ் கொண்டு வராவிட்டாலும், அவர்களை பஸ்சில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என, அரசு பஸ், விருதுநகர் கோட்ட பொதுமேலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ,என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக