மதுரை: ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை, சொக்கிகுளம் ஜெயகிருஷ்ணா தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.) வெற்றிபெற 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) நிர்ணயித்தது.
இதில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு (ஓ.பி.சி.) மதிப்பெண் சலுகை வழங்கலாம் என உத்தரவிட்டது. 2011 ல் ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. உத்தரவிட்டது.
தமிழகத்தில், 2012 ஜூலை 12 ல் முதன்முதலில் நடந்த டி.இ.டி. தேர்வில் 0.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் தமிழக அரசு மறு தேர்வு நடத்தியது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சலுகை பெற்ற பிரிவினருக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி 2014 பிப்.6 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
தகுதியை நிர்ணயிப்பதற்கு மட்டுமே என்.சி.டி.இ.க்கு அதிகாரம் உள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மதிப்பெண் சலுகை வழங்கிய என்.சி.டி.இ. மற்றும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
2013 ஆகஸ்டில் நடந்த டி.இ.டி. தேர்வு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, கற்பித்தல் அனுபவம் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எபனேசர் ஆஜரானார். நீதிபதி, "பணி நியமனம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும்" என்றதுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், என்.சி.டி.இ., ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர், தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக