கடலூர்: நமது பள்ளிகள், நவீன அடிமைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன என்று பிரபல குழந்தை இலக்கிய எழுத்தாளரும், கல்வியாளருமான ஆயிஷா நடராசன் வேதனை தெரிவித்துள்ளார்.
கடலுாரில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும், இரா.நடராசன், ஆயிஷா நடராசன் என, இலக்கிய உலகில் எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர். இவரது ஆயிஷா என்ற குறுநாவல், அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களை எப்படி நடத்த வேண்டும் என காட்சிப்படுத்திய துயர காவியம்.
பல்வேறு இயக்கங்களாலும், தன்னார்வலர்களாலும், ஆயிஷா நாவல், நுாற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இவர் எழுதிய 72 புத்தகங்களில், அதிகமானவை குழந்தை இலக்கிய புத்தகங்கள்தான். இந்த ஆண்டுக்கான, பால சாகித்ய விருது இவரின், விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. அதை முன்னிட்டு அவருடன் உரையாடியதில் இருந்து...
வாசகர்களின் உயிரை உருக்கிய ஆயிஷா நாவல் வெறும் புனைக்கதைதானா?
பாம்புக் கடிக்கான மருந்து, பாம்பிலே உள்ளது, அதை கண்டுபிடிக்க வேண்டும் என முயற்சி செய்த மாணவன், தனது பாம்பை தன்னை கடிக்க விட்டான்; மருந்து வேலை செய்யவில்லை. இறந்து போனான். தோற்பவர்கள் யாரும் விஞ்ஞானிகள் இல்லையா? அந்த விஞ்ஞானி தோற்றுப் போனான்.
30 ஆண்டுகளுக்கு முன், இந்த செய்தியை நாளிதழில் படித்தபோது, ராத்திரி முழுக்க எனக்கு துாக்கம் வரவில்லை. அதை புனைக் கதையாக்கினேன். மற்ற அனைத்து சம்பவங்களும், வகுப்பறை கொடுத்தவை. ரோஸ் குறுநாவல், குழந்தைகளின் உரையாடலையே அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. அவர்களின் சொற்கள் மிக நுட்பமாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது எப்படி சாத்தியமானது?
நான் ஆசிரியனாக, பணிபுரிபவன் அல்ல; ஆசிரியனாகவே வாழ்பவன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. குழந்தைகளின் உலகத்தை, அவர்களின் உலகத்துக்குள் சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும். அதற்கு அர்ப்பணிப்பு தேவை. இந்த 27 ஆண்டுகால ஆசிரியர் பணியில், மாணவர்களிடமிருந்து தினந்தோறும் புதிதாக எதையாவது கற்று வருகிறேன். உண்மையில் எங்கள் மாணவர்கள்தான், எனக்கு ஆசிரியர்கள்.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், குழந்தைளுக்கான நுால்கள் எழுதுவோர் குறைந்து போனது ஏன்?
குழந்தைகள், காலம்தோறும் மாறக்கூடியவர்கள். பெரியவர்களுக்கான இலக்கியம், எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும். அதனால், குழந்தைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் முழுமையாக புரிந்தால் மட்டுமே சாத்தியம். அவர்களின் இன்றைய காலகட்ட மொழி, பழக்க வழக்கங்கள் இதை எல்லாம் கூர்ந்து கவனித்தால், குழந்தை இலக்கியம் சாத்தியம். இதை கவனிக்காததால், குழந்தை இலக்கியம் எழுதும் ஆட்கள் குறைந்து விட்டனர். எடுத்துக்காட்டாக, ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் என்று எழுதினால், அடுத்த வரி, அவனுக்கு இத்தனை மனைவிகள் என, பெரியவர்களுக்கு எழுத வேண்டும்.
அந்த மன்னன் மிகவும் ஒல்லியாக சோர்ந்து காணப்பட்டான் என, குழந்தைகளுக்கு எழுத வேண்டும். பள்ளி மாணவர்கள், ஜாதிக்கான கயிறுகள் கட்டி வரும் வகையில் கலாசாரம் மாறிவிட்டது. இந்த நிலையில், குழந்தை இலக்கியங்கள் எப்படி மாணவர்களை மாற்றும்? அடிப்படை கல்விக் கோட்பாட்டிலேயே சிக்கல் உள்ளது. நவீன அடிமைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக, பள்ளிகள் மாறிவிட்டன.
தேர்வுக்கான மதிப்பெண் அடிப்படையில், கல்வி முறை இருப்பதால், இயந்திரமாகவே மாணவன் மாறிவிடுகிறான். இதில், ஜாதியும், மதமும், அந்த கல்விமுறை என்ற இயந்திரத்தில் பிணைக்கப்பட்ட சிறுபாகங்கள். அடிப்படை மாறினால், அனைத்தும் மாறும்.
உலகத்தில், இரும்புக்கை மாயாவியும், துப்பறியும் சாம்புவும் எப்படி சாத்தியமாகும் என, நினைக்கிறீர்கள்?
ஏன் சாத்தியமாகாது? கார்ட்டூன் சேனல்கள், தமிழக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் கொண்டவை இல்லை. அவை அமெரிக்க நிகழ்ச்சிகளின் மொழிபெயர்ப்புகள். அடிப்படையிலேயே சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, இன்றைய வணிக உலகில், குழந்தைகள் தனித்து விடப்பட்டுள்ள சூழ்நிலையில், காமிக்ஸ் புத்தகங்கள் வந்தால் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக