கோவை: கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத, 316 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியின் உத்தரவின் பேரில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், நர்சரி மற்றும் பிரைமரி, விளையாட்டுப் பள்ளிகளில், தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நடத்தப்படும் பள்ளிகளுக்கு, சுகாதார சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு சான்று, கட்டட உரிமை சான்று பெற்றிருக்க வேண்டும்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நலனுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. கடந்த மே மாதம் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதி பெறாத 49 பள்ளிகள் மூடப்பட்டன. தொடர் ஆய்வில், இதுவரை 316 பள்ளிகள் அங்கீகாரம் பெறாதது தெரியவந்துள்ளது. இப்பள்ளி நிர்வாகத்தினருக்கு முதற்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், "பள்ளிகளில் உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று, அரசு சார்பிலும், கல்வித்துறை சார்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பள்ளிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து, தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். அதை கடைபிடிக்காத பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து வருகிறோம்.
இதுவரை 316 நர்சரி, பிரைமரி மற்றும் விளையாட்டுப் பள்ளிகளுக்கு, முதற்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பதிலளிக்க, 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில், இரண்டாம் கட்ட நோட்டீஸ், அதற்கு பின் மூன்றாம் கட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு, முறையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக