ஈரோடு: மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. 260 பேர் பயில்கின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால், பெரும்பாலும் விவசாய கூலிகள், தொழிலாளர்களின் குழந்தைகளே இங்கு படிக்கின்றனர்.
ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் தலா 30 பேரும், ஆறு முதல் எட்டு வகுப்பு வரை 117 பேரும் படிக்கின்றனர். ஆறாம் வகுப்பில் தமிழ், ஆங்கில மீடியம் உள்ளன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் வகுப்பறை உரையாடல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழில் பேச துவங்கினால், சக மாணவ மாணவியரே, ஆசிரியரிடம் காட்டி கொடுத்து விடுகின்றனர். நன்கு கற்றுணர வேண்டும் என்ற நோக்கில் பேச்சு, எழுத்து, படிப்பதில், அனைத்துமே ஆங்கிலத்தில் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து பள்ளி ஆங்கில ஆசிரியை செல்வி மணியம்மை கூறியதாவது: மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளி, மாணவ, மாணவியரை ஆங்கிலம் பேச வைத்துள்ளோம். ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளிலும் சிறப்பாக கற்பிக்க இயலும் என்பதை, வெளிகாட்டும் விதமான முயற்சி இதுவாகும்.
தற்போது படிப்பது, எழுதுவது, பேசுவது, புரிந்து கொள்வது மட்டுமின்றி, ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியருடன் உரையாடுகின்றனர். துவக்கத்தில்தான், ஆங்கிலம் குறித்த தயக்கம் இருந்தது. மெல்ல, மெல்ல ஓரிரு வார்த்தைகளாக பேச, எழுத, படிக்க துவங்கினர். 2012 முதல் ஆங்கிலம் பிரதானமாக்கப்பட்டது.
இதனால், மாணவர்களிடையே பீதி, தயக்கம் இருந்தது. ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பு கவனம் செலுத்தியதால், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தினமும் உணவு இடைவேளையின்போது, 20 நிமிடம், வகுப்பறையில் தினமும் 10 நிமிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் குறிப்பிட்ட நாட்களே, ஆங்கில வகுப்புகள் உள்ளன. அவற்றில் முழுமையாக ஆங்கில உச்சரிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்பது துவக்கத்தில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது மாணவர்களே அதை நடைமுறையாக்கி கொண்டுள்ளனர்.
பதில் அளிக்க தெரியாவிடில், ஆசிரியர்களிடமே விளக்கம் கேட்கின்றனர். ஓரிரு முறை சொல்லி கொடுக்கும் பட்சத்தில், பழக்கி கொள்கின்றனர். ஓரிரு வார்த்தைகள் பேசுபவர், சிறு கதைகள், மொழி பெயர்ப்பு அளிக்கப்படுகிறது. எளிதான வாக்கியம் அடங்கிய கதை புத்தகங்கள், எஸ்.எஸ்.ஏ., சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளியில், இங்கிலீஷ் லிட்டரரி கிளப் 2012ல் துவக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிளப் கூடும். அப்போது நாடகம், பாட்டு, பேச்சு, சிறு உரையாடல்களை ஆங்கிலத்தில் மாணவர்கள் மேற்கொள்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கிளப் உறுப்பினர்களாக உள்ளனர். ஆங்கில பயன்பாடு காரணமாக பயம் நீங்கியுள்ளது. மாறாக ஆங்கிலத்தில் உரையாடுவதை மாணவர்கள் பழக்கப்படுத்தி கொண்டுள்ளனர்.
கிளப் நிகழ்ச்சிகளில் ஆங்கில திறனை வெளி காட்டலாம் என்ற தன்னம்பிக்கை அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. 80 சதவீத மாணவர்கள் கிளப் உறுப்பினராக உள்ளனர். கிளப்பில் கதை, கவிதை, கட்டுரை போட்டி ஆங்கில பயன்பாட்டுக்கு உதவிடுவதாக அமைந்துள்ளது என்றார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளியிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலத்தில் உரையாட மேற்கொண்டுள்ள முயற்சி, பெற்றோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக