காஞ்சிபுரம்: மாநில அளவில், தமிழக அரசு, ஆசிரியர் தின விழாவை நடத்தி முடித்த நிலையில், மாவட்ட அளவில், விழா நடத்தப் போகிறோம் எனக் கூறி, 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), சாந்தி வசூல் செய்திருப்பதாக புகார் எழுந்து உள்ளது.
விழாவும் நடத்தாமல், வசூலித்த பணத்தையும் கொடுக்காமல் இருப்பதால், ஆசிரியர்கள், கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ராதாகிருஷ்ணன் விருது
ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னையில், செப்., 5ம் தேதி, ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. மாநில அளவில், இந்த விழாவை நடத்தி, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில், தனியாக விழா நடத்தப்படுவது இல்லை. ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), சாந்தி, மாவட்ட அளவில், ஆசிரியர் தின விழாவை நடத்த, ஆக., மாதம், பள்ளிகளிடம் இருந்து, வசூல் நடத்தியதாகவும், ஆனால் இதுவரை, விழாவை நடத்தவில்லை எனவும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகி கள், பள்ளிக்கல்வித் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர் சங்கத் தலைவர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆக., 6ம் தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையை, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும், சாந்தி அனுப்பினார்.
அதில், அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்தால், 900 ரூபாய், மேல்நிலைப் பள்ளி எனில் 1,300, அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி 1,100, மேல்நிலைப் பள்ளி 1,500, மற்றும் சுயநிதி தனியார் உயர்நிலைப் பள்ளி 1,100, மேல்நிலைப் பள்ளி 1,500 ரூபாய் வீதம், விழாவிற்கு தர வேண்டும் என உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், 623 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கு சராசரியாக 1,000 ரூபாய் என்றாலும், வசூல் தொகை 6 லட்சம் ரூபாயை தாண்டுகிறது.
விழா நடத்தவில்லை
இதுவரை விழாவும் நடத்தவில்லை; வசூலித்த பணத்தையும், திருப்பித் தரவில்லை. மாநில அளவில் ஒரு விழா நடந்த பின், மாவட்ட அளவில், சி.இ.ஓ., விழா நடத்துவது ஏன்? இதற்கான பின்னணி காரணத்தை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறையிடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு, அந்த தலைவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து, விசாரிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உறுதி அளித்திருப்பதாவும், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வசூலித்தது உண்மை தான்!
ஆசிரியர் புகார் குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: பள்ளியின், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, பணம் வசூலித்தது உண்மைதான். ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்து, நல்ல ரிசல்ட்டை காட்டிய ஆசிரியரை கவுர விப்பதற்காகவும், அவர்களுக்கு சான்றிதழ் கொடுப்பதற்காவும், விழா நடத்துவது தவறா?
விழாவிற்கு எதிராக புகார் கொடுப்பவர்கள், உண்மையான சங்க நிர்வாகிகளே கிடையாது. அவர்கள், ஆசிரியருக்கு எதிரானவர்கள். இவர்களின் புகார்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மாவட்ட அமைச்சரை வைத்து விழா நடத்த உள்ளோம். அவரின் தேதி கிடைக்கவில்லை. அதனால் விழா தாமதம் ஆகிறது. அமைச்சர் தேதி கிடைத்ததும், கண்டிப்பாக விழா நடத்துவோம். இவ்வாறு சாந்தி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக