புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 7 அன்று வெளியிடப்பட்டன. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம். தேர்ச்சி பெறாதவர்கள் சோர்ந்து போகாமல் அடுத்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துவோம். தேர்வு முடிவுகளோடு அரசுப் பள்ளிகள் பின் தங்கின என்றும் தனியார் பள்ளிகள் முந்தின என்றும் சில நாளேடுகள் செய்திகள் வெளி யிட்டுள்ளன. இது உண்மைதான் என்றாலும் அரசுப் பள்ளிகளை அலட்சியப்படுத்தி தனியார் பள்ளிகளை உயர்த்தும் தொனி இதில் இருப்பது தான் சங்கடம்.
முதலில், அரசுப் பள்ளி என்பது மெட்ரிக் மற்றும் தனியாரை போன்று ஒரே பிரிவைச் சார்ந்தவையல்ல. தனித்த அரசுப் பள்ளிகளோடு ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள், கள்ளர்-சீர்மரபினர், சிறுபான்மை யினர், சமூக நலத்துறை, மாநகராட்சி, நகராட்சி எனப் பல பரிவுகளின் கீழும் நடத்தப்படுகின்றன. இவற்றின் தேர்ச்சி விழுக்காடும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.இந்தப் பள்ளிகளில் படிப்போரில் பெரும்பாலோர் தலையில் எண்ணெய் வைக்கவோ, மாற்றுத் துணியும் கால்களுக்கு செருப்பும் இல்லாத வறிய மக்களின் குழந்தைகள் என்பதையும் கவனிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் வறிய நிலையில் உள்ள மாணவ,
மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். அதே சமயம், புற்றீசல்போல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப பொருளாதார வசதிக ளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தான் இரு வகை பள்ளிகளுக்குமானஇடை வெளி நன்கு புலப்படும்.அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிவது கவலைக்குரியது. இந்த நிலை நீடித்தால் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகரப்புறங்களிலும் உள்ள அரசுப் பள்ளி களில் படிக்கும் மாணவர்கள் படிப்பை இடையிலேயே நிறுத்தும் நிலை அதிகரிக் கலாம்.
இது எதிர்கால வளர்ச்சிக்கு உகந்தாக இருக்காது. அடிப்படைக் கல்வி வளர்ச்சியே பெரும் கேள்விக் குறியாக மாறும் அபாயமும் உள்ளது.எனவே, தமிழ்நாட்டில் கல்வித் தரத்தை உயர்த்த அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டியது கட்டாயத் தேவையாகும். மாநில அரசும், கல்வித்துறையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கட்டடம்,
ஆய்வுக் கூடம் என சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பொறுப்புண்டு! தன் மகனை அரசுப் பள்ளியில் படிக்கச் செய்து முன்னேறச் செய்த கோவை அசோகபுரம் பள்ளி ஆசிரியையை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது ஊக்குவிப்பது என்பதே கல்விக் கண் திறப்புக்குச் சிறந்த வழியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக