சிவகங்கை மாவட்டத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கணினிமயமாக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் 12 ஒன்றியங்களில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 22 அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கென 3 அலுவலர்கள் என 25 உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணியினை மேற்பார்வையிடுவது, சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களை பெற்று வழங்கவும், மாணவர்களின் கல்வித் தரத்தை ஆராய்பவர்களாகவும் செயல்படுகின்றனர்.
கல்வித் துறையில் அனைத்து கடிதப் போக்குவரத்தும் மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமே நடைபெறுகிறது. மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாத ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் அனைத்தும், இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்து வழங்கப்படுகிறது.
இதற்கு, அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கருவூலத் துறை சார்பில் முறையான பயிற்சி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இணையதள வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை.
இதனால், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இணையதள வழி ஊதிய பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தனியார் கணினி மையத்துக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் கூறியது: தனியார் கணினி மையங்களுக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதற்குத் தேவையான செலவினத் தொகையை, சில அலுவலர்கள் ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் செய்து சரிக் கட்டுகின்றனர்.
அலுவலர்களுக்கு கணினி பயிற்சியளிக்கவும், இணையதள வசதி உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக