தேர்வு நேரத்தில் தொடர் பயிற்சி அளிப்பதை தவிர்க்க வேண்டும்; ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்
முதல் பருவத் தேர்வு தொடங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை தவிர்த்திருக்க வேண்டுமென கல்வி இயக்கத்திற்கு (SSA) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
வருகிற 19ந் தேதி முதல் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதால் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள நிலை உள்ளது. இதனால் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு சார்ந்த பயிற்சி அளிப்பதில் ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை 4 நாட்கள் வீதம் நான்கு கட்டங்களாக முடித்துள்ள நிலையில் கணித உபகரண பயிற்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10, 11, 14 தேதிகளில் முதல் கட்டமாக வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 15, 16, 18 தேதிகளிலும் நடக்க இருக்கிறது. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி 15, 16, 18 தேதிகளிலும், ஆங்கிலப்பயிற்சி 14, 21, 28 தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இதனால் பயிற்சியில் கலந்துகொள்ள பெரும்பான்மையான ஆசிரியர்கள் சென்று விடுவதால் பள்ளியில் சொற்ப எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் உள்ளனர். பல பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே நீடிக்கும் நிலை உள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தும் என்றாலும், ஆண்டு முழுவதும் சீராக கொடுக்க வேண்டிய பயிற்சியை ஒரே நேரத்தில் கொடுப்பதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதோடு மடடுமல்லாமல் தேர்வு நேரத்தில் அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மேலும் பள்ளியில் ஆசிரியர் இல்லாததால் கிராம மக்களின் அதிருப்திக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதி ஒரே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை கல்வித்துறை தவிர்க்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- நா.ஆதித்யா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக