சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2000 பேர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினரும் திங்கள்கிழமை இணைந்து போராடினர்.
சிவகங்கையில் அரண்மனைவாசல் முன்பாக அரசு ஊழியர்கள் அனைவரும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் செல்வக் குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து 707 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி:காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து, போராட்டக் குழுவின் சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்லமுத்து தலைமையில், காரைக்குடி வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக மறியல் செய்வதற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது டி.எஸ்.பி (பொறுப்பு) கருப்புச்சாமி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தி 312 பெண்கள் உள்பட 363 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரை: மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் பெண்கள் உள்பட 450 -க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மறியலின்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அண்ணாசிலையருகே நடைபெற்ற போராட்டத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ், வட்டக்கிளைச் செயலர் மகாலிங்க ஜெயகாந்தன் முன்னிலை வகிக்க அரசு ஊழியர் சங்கத்தினர் 460 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியலில் ஊரக வளர்ச்சித் துறை சாலைப்பணியாளர் சங்கம், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி: இளையான்குடி வாள்மேல்நடந்த அம்மன் கோயில் அருகே அரசு ஊழியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, ஊட்டச்சத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் 211 பெண்கள் உள்பட 258 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக