இனியும் காலம் செல்லாது
இடைநிலை ஆசிரியத் தோழனே!
காரணங்கள் ஏதும் சொல்லாது
களமிறங்கு வேலை நிறுத்தத்தில்!!
இழப்பதற்கு இனியேதும் நமக்கில்லை
பெறுவதற்கு ஓய்வூதியம், ஊதியமிருக்கு!!
எதிர்வரப்போகுது தேர்தல் தேதி!
உடன்வரப்போகுது ஊதியக் குழு!!
கட்டம்பார்த்து காலம் கணிக்கும்
திட்டமேதும் உனக்கு இருக்கோ?
திட்டம்தீட்டி தலைமை அறிவிக்க
நாட்கள்தான் நமக்கு இருக்கோ?
நமக்கான வாழ்க்கை மட்டுமல்ல
நம் மக்களுக்கான வாழ்க்கையும்
நமது கரங்களில் தரப்பட்டுவிட்டது!
கையறு நிலையில் இருந்தோர்க்கு
கிடைத்தாயிற்று வேலை நிறுத்தத்
திறவுகோல் - திறந்திடத் தீவிரி!
சங்கம் பார்த்து சங்கமிக்க
மாநாட்டு கூட்டத்திற்கு அல்ல,
வாழ்வாதார உரிமைப் போராட்டத்தில்
கருதிய களத்திற்கு உண்மையோடு,
ஆசிரியப் பேரின உரிமையில்
ஆ.ப கூட்டணி அழைக்கிறது!
உறுதியோடு எழுந்துவா தோழனே!!
நம்மிடம் பாடம் பயின்றிட்ட
அரசூழியரின் போராட்டம் பார்!
கற்றோரின் உரிமை வேட்கையே
இத்தனை மாபெரிது எனில்,
கற்பிப்போராகிய நம் வீரம்
அதனினும் மேல் அன்றோ!
மாற்றுத் திறனாளி மையத்தினர்
மாற்றம் நிகழவில்லை எனில்
முற்றுகை உடன் நிகழ்த்தப்படும்
என்று உரைத்த துணிவங்கே!
முழுத்திறனும் நமக்கு இருந்தும்
முதல்வர் சொல்லும் வரை
பொறுப்போம் எனும் குனிவிங்கே!
மறியலில் சிறை நிறைத்தும்
மனந்திறக்க மனதில்லை அரசிற்கு!
அமைச்சர் கூட்டத்தின் நிகழ்வினை
அறிவிக்க மனமில்லை தலைமைக்கு!
16-ல் பதில் சொல்லாவிட்டால்
17-ல் கூடுவோம் என்கின்றனர்,
2011-ல் அளித்த வாக்கை
இன்று வரை காக்காதவர்
நாளை செய்வார் என்று
நம்பி வந்த காரணமேனோ?
உடன்பாடு எட்டப்படா விட்டால்
உடனே அடுத்த அறிவிப்பென,
காலையில் கூடியெடுத்த முடிவு
மாலையில் மாயமான காரணமேனோ?
40ஆண்டுகள் போராடிப் பெற்றதை
நாசமாக்கியது போன ஆட்சி!
நாலரை ஆண்டுப் போராட்டங்களுக்கு
மசியவேயில்லை இந்த ஆட்சி!!
இறுதி மறியலுக்குப்பின் - அடுத்த
அறிவிப்பேயில்லை, ஜேக்டோ சாட்சி!!!
ஆட்சியைப் நெருக்கும் காலமிது
புரட்சியைப் பெருக்கும் காலமிது
பறிக்கப்பட்ட உரிமை அனைத்தையும்
இருந்தபடி மீட்டெடுக்க - அறிவியுங்கள்
அடுத்தகட்ட போராட்டத்தை என்று
நீயும்நானும் கேட்டது போன்று
போராளிப் பாசறையும் கேட்டதன்று!
கூட்டமைப்பில் பதிலில்லை எனினும்
கூட்டணிக்குள் பதில் உரைக்க
கூட்டிய மாநாட்டில் ஒலித்தது,
ஆசிரியர் வாழ்வினைக் காத்திட
அனைவர் உணர்வினை மதித்திட
உறுதியான இறுதிப் போராட்டமாம்
வேலை நிறுத்தப் போராட்டம்!!
மாநாட்டுப் பிரகடனத்தை - நம்
மனம் விரும்பிய தீர்மானத்தை
மாநிலக் கூட்டமைப்பிற்கு அறிவித்து
மறுபதிலேதும் இதுவரை இல்லை!
பொறுமைக்கான காலமோ நமக்கில்லை!
கூட்டமைப்பு உடையவில்லை என்று,
கூட்டணித் தீர்மானப்படியே இன்று
இறுதியான தீர்மானத்தை, திருச்சியில்
உறுதியுடன் அறிவித்துள்ளது - அரசு
ஊழியருடன் வேலை நிறுத்தத்தில்
உடன் சேர்கிறோம் நாங்களுமென்று!
1988, 2002-03 ஆண்டுகள் போன்று!!
சிவப்புப் காரர்கள் கூட்டமது
சேராதே நீயும் என்னும்
சிறுபுத்திக் காரர்கள் கூற்றை
சிந்தையில் ஏற்றும் முன்னர்,
சிவப்புக் கம்பளம் விரித்துச்
சிறப்பிக்க நாதியுண்டா நாட்டிலென
சிந்தித்துச் சீர் பொருந்து!
உறுதியான உரிமைப் போராட்டமே
இறுதியான உயிர்ப்பு மருந்து!!
வேலையற்ற வீணர்கள் சொல்லும்
தேவையற்ற வாதங்கள் போல
வெண்ணெய் திரண்டு வரும்போது
பானையை உடைக்க அல்ல!
வெருங்கையோடு அமர்ந்து இருக்காது
வெண்ணெய்யைத் திரளச் செய்யவே,
கடைபவர்களுடன் கரம் கோர்க்க
களம் நோக்கி அழைக்கிறது!
இனியும் காலம் செல்லாது
இடைநிலை ஆசிரியத் தோழனே!
இழப்பதற்கு இனியேதும் நமக்கில்லை
பெறுவதற்கு ஓய்வூதியம், ஊதியமிருக்கு!!
கையறு நிலையில் இருந்தநமக்கு
கிடைத்தாயிற்று வேலை நிறுத்தத்
திறவுகோல் - திறந்திடத் தீவிரி!
கற்றுத் தந்த வரலாற்றுப்படி,
பற்றி எரியட்டும் போராட்டத்தீ!
ஆணவப் போக்கைச் சாம்பலாக்கி
ஆவணம் படைப்போம் ஒன்றாகி!!
கோடிக்கைகள் ஒன்றிணைவோம்!
கோரிக்கைகள் வென்றிடுவோம்!!
உரிமைகளை மீட்டெடுக்க
ஓங்கி ஒலிக்கட்டும்
ஆசிரியர் அரசூழியரின்
ஆக்கப்பூர்வ ஒற்றுமை❗❗
அரசூழியர் இயக்கங்களுடனான
வேலைநிறுத்த அழைப்பிற்காக,
✒செல்வ.ரஞ்சித்குமார் (செ.கு.உ)
த.நா ஆ.ப ஆசிரியர் கூட்டணி,
பொன்னமராவதி.
வேலைநிறுத்த அழைப்பிற்காக,
✒செல்வ.ரஞ்சித்குமார் (செ.கு.உ)
த.நா ஆ.ப ஆசிரியர் கூட்டணி,
பொன்னமராவதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக