சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக வரி விலக்கு கணக்கு எண்(TAN) பெறவில்லை என 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களிலில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் வரிவிலக்கு கணக்கு எண் மூலம் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் மாறுபட்டு செயல்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்கள். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் கடந்த 2ந் தேதி நடத்திய பேச்சு வார்த்தையில் மார்ச் 4ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இது வரை ஊதியம் வழங்கப்படாததால் 20க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினார்கள்.
நேற்று (9.3.16) மாலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்லல் வட்டாரத் தலைவர் ஜான் இக்னேஷியஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒன்று கூடினர். அதன்பின் மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளார் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், கல்லல் வட்டாரச் செயலாளர் சேவியர் சத்தியநாதன், மாவட்டத் துணைத் தலைவர் சூசைராஜ், பொருளாளர் ஜஸ்டின் திரவியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இராமர் அவர்களிடம் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து விளக்கம் கேட்டனர். மேலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூர்த்தி உடனடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி முற்றுகை போராட்டமாக மாறியது. ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று தராமல் அலுவலகத்தை விட்டு நகர மாட்டோம் என ஆசிரியர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களில் உள்ள நடைமுறைப்படி கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், கல்லல் காவல் ஆய்வாளர் கணபதி ஆகியோர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடனும் அலைபேசியில் பேச்சு வார்ததை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை முடிவில் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இராமர் ஆசிரியர்களின் ஊதிய பட்டியலில் உடனடியாக கையெழுத்திட்டார். மேலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூர்த்தி அவர்களின் கட்டுபாட்டில் உள்ள மற்ற 6 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 10ந் தேதி காலை சம்பள பட்டியல் கையெழுத்திட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் ஓரிரு நாட்களில் ஊதியம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததின் பேரில் ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக