நெல்லை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது
தமிழகப் பள்ளிகளில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் ஆகிய 4 வகை பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தரத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவரக சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது.
இதற்காக கல்வியாளர்களை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டன. பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. கல்வி நிபுணர்களின் கருத்துக்களை அறிந்தபின் பாடத்திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. கடந்த கல்வியாண்டில் 1-ம் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படுகிறது. இதற்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக 1-ம் வகுப்புகான அனைத்து பாடப்புத்தகங்களும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. மற்ற வகுப்புகளுக்கு இம்மாதத்திற்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி ஆர்வலர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. ரூ.80 கோடி மதிப்பில் இலவச பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.11 கோடி மதிப்பீல் நோட்டு, புத்தகம் வழங்கப்பட உள்ளது.
1-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகங்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் செட் ஒன்றுக்கு ரூ.250 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு செட் புத்தகத்திற்கு 5 சதவீதம் கழிவு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக