கல்வி உரிமை சட்டத்தின்கீழ், பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தகுதி தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்காக இந்த தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு(சி.டி.இ.டி) என்ற பெயரில், கே.வி.எஸ், நவோதயா வித்யாலயா, திபெத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சண்டிகார் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தின் கீழ்வரும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க இந்த தேர்வு வரும் சூன் மாதம் 26 ம் தேதி சி.பி.எஸ்.இ. அமைப்பால் நடத்தப்படுகிறது.
முதல்முறையாக நடத்தப்படும் இந்த தேர்வானது, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழங்கிய வழிகாட்டுதலின் படியும், கல்வி உரிமை சட்டத்தின் படியும் நடைபெறுகிறது. இந்த தேர்வின்மூலம், வருடா வருடம் படித்து வெளிவரும் ஆயிரக்கணக்கான பி.எட். மாணவர்களின் தரத்தை மதிப்பிட முடியும். மேலும் விரும்பினால், அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளும் இந்த தேர்வை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயத்தில், மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாத மாநில அரசுகளும் இந்த தேர்வை பரிசீலனை செய்யலாம்.
இந்த தேர்வுக்கான வினாத்தாளில் ஆப்ஜெக்டிவ் முறையில் 150 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்களே இதில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதேசமயம் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த தேர்வை எழுதுவதற்கு எண்ணிக்கை வரம்புகள் எதுவும் இல்லை. ஒருவர் தேர்ச்சி பெறும் வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்து ஒருவர் தேர்ச்சி பெற்றுவிட்டாலும், தனது மதிப்பெண்களை அதிகப்படுத்திக்கொள்ள, மீண்டும் இத்தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: கல்வி மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக