தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை பின்பற்றப்படுமா? அல்லது போட்டித்தேர்வு நடத்தப்படுமா? என்பதை அறிந்துகொள்ள பி.எட். பட்டதாரிகள் ஆர்வமாக உள்ளனர்.
ஆசிரியர்கள் நியமனம்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் தவிர, பட்டதாரி ஆசிரியர்களும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களும், சிறப்பு ஆசிரியர்களும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலமாக நியமிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், அடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க. அரசு, ஆசிரியர் நியமனத்தில் மாறுதலை கொண்டுவந்தது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மட்டுமல்லாமல் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்.
பதிவுமூப்பு முறை அமல்
கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு மூலமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமார் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பணிநியமன ஆணையை எதிர்நோக்கி உள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டுமின்றி கல்லூரி விரிவுரையாளர் நியமனத்திலும் மாறுதல் செய்யப்பட்டு போட்டித்தேர்வு முறை நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் போடப்பட்டு விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
மீண்டும் போட்டித்தேர்வு?
இந்த சூழ்நிலையில், தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் நியமனத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பின்பற்றப்பட்டு வந்த போட்டித்தேர்வு முறை அமல்படுத்தப்படுமா? அல்லது கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை தொடர்ந்து பின்பற்றப்படுமா? என்பதை அறிந்துகொள்ள பி.எட். பட்டதாரிகள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இளம் பி.எட். பட்டதாரிகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு ஆசிரியர் வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் வயது முதிர்ந்த பி.எட். பட்டதாரிகள் இருதரப்பினரும் பயன்பெறும் வகையில் 50 சதவீத இடங்களை போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்களை பதிவுமூப்பு மூலமாகவும் நிரப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதுபோன்ற பரிந்துரையை கடந்த ஆண்டே பள்ளிக்கல்வி அதிகாரிகள் அரசிடம் சமர்ப்பித்தனர். ஆனால், அந்த பரிந்துரையை அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக