நியூயார்க்/மெல்போர்ன், ஜூன் 1: செல்போனை பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களை புற்றுநோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நவீன உலகில் செல்போன் உள்ளிட்ட மின்காந்த அலையை வெளியிடும் தொலைத்தொடர்பு சாதனங்களை தவிர்க்க முடியாவிட்டாலும், முடிந்தவரை அதை பயன்படுத்துவதில் இருந்து ஒதுங்கியிருந்தால் ஓரளவுக்கு புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்க இயலும் என்றும் உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பை (ஐஏஆர்சி) சேர்ந்த விஞ்ஞானிகளின் கூட்டம் பிரான்சில் உள்ள லியோன் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. 8 நாள்கள் நடந்த இந்த கூட்டத்தில், செல்போனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து விரிவாக ஆலோசித்தனர். செல்போனால் ஏற்படும் தீங்கு குறித்து இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளை ஆய்வு செய்தனர். பெரும்பாலான ஆய்வுகளில் செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர். ""செல்போன் பயன்படுத்துவதால் மனிதர்கள் உள்பட அனைத்து உயிர்களுக்கும் தீங்கு ஏற்படுவது உண்மை. மனிதர்களை புற்றுநோய் தாக்குவதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இருப்பினும் இது இன்னும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பல ஆய்வுகளிலும் செல்போனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரியவந்துள்ளன'' என்று ஐஏஆர்சி விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும் செல்போனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படுவது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக