மதுரை : மதுரை மாவட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழித் திறன்களை அதிகரிக்க ஆசிரியர்கள் அக்கறை காட்ட வேண்டும் என கலெக்டர் சகாயம் அறிவுறுத்தினார். மதுரை கலெக்டர் சகாயம் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் ஞானகவுரி, மாநகராட்சி கல்வி அலுவலர் உட்பட பலரும் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது: துவக்க கல்வியில் ஒவ்வொரு வட்டாரத்திலும் தலா ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து, அதை "மாதிரி பள்ளி'யாக்க வேண்டும். இப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு, எழுத்து திறன் வளர்த்தல், கம்ப்யூட்டர் அறிவு பெறச் செய்தல் உட்பட தனியார் பள்ளி மாணவர்களைவிட மேம்பட்டவர்களாக்க வேண்டும் என கூறினார். இதற்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதுடன், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். இருமாதங்களுக்குப் பின் வந்து ஆய்வு நடத்துவேன். அதன்பின் பள்ளிக் கல்வித் துறையில் அரசு பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தினார். பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பலர் தமிழில் தோல்வி அடைந்திருந்தனர். கடந்த ஆண்டைவிட தோல்வி சதவீதம் அதிகரித்து இருந்ததால், அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் மாணவர்களை திறம்பட்டவராக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில்தான் தமிழ் வாழ்கிறது. எனவேதான் ஆசிரியர்களுக்கும் பணிவாய்ப்பு கிடைக்கிறது. இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். அதற்காக எவ்விதமான பயிற்சி தேவையோ அதை நடத்த முன்வரவேண்டும். அவ்வப்போது பள்ளிகளை நான் ஆய்வு செய்வேன்.அதற்காக எவ்வித அடிப்படை வசதிகள் தேவையோ அவற்றை கேளுங்கள், செய்து தருகிறேன். இனிமேல் தமிழில் தோல்வியே வரக்கூடாது. மாணவர்களின் திறனுக்கேற்ப ஆசிரியர்கள் இறங்கி வந்து பாடம் நடத்த வேண்டும். நாம் வாங்கும் ஒவ்வொரு 5 காசுக்கும் மக்களுக்கு பதில்கூறியாக வேண்டும், என்றார்.
தேர்வு செய்யப்பட்ட மாதிரி பள்ளிகள் ஆங்கிலத் திறனை வளர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகள் விபரம்: பஞ்., யூனியன் பள்ளி சிட்டம்பட்டி, ஆலாத்தூர், மதுரை சுப்ரமணியபுரம் மாநராட்சி ஆரம்ப பள்ளி, குயவர்பாளையம் திரவுபதை அம்மன் எண்.2 பள்ளி, பஞ்., யூனியன் பள்ளி குறவன்குளம், செம்பட்டி, சிவரக்கோட்டை, வஞ்சிநகரம், கீழையூர், நாகையாபுரம், தொட்டியபட்டி, காண்டை, தென்பழஞ்சி, யு.வாடிப்பட்டி, சி.புதூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக