நாகர்கோவில் : எந்த பாடத்திட்டம் என்பது முடிவாகாததால், 6 முதல் 10ம் வகுப்புக்கு செப்டம்பரில் நேரடியாக காலாண்டு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிட்டேர்ம் டெஸ்டுகள் ரத்து செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுமா அல்லது பழைய பாட திட்டம் தொடருமா என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலமாக மாணவ, மாணவியருக்கு களப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு மட்டும் வழக்கம்போல் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தநிலையில், 6 முதல் 10 ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு முதல் இடைத்தேர்வு (மிட்டேர்ம் டெஸ்ட்) நடத்தப்படாமல் செப்டம்பரில் நேரடியாக காலாண்டு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் ஆகஸ்ட் மாதம், முதல் இடைத்தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்துணைத்தலைவர் ஆண்ட்ரூ வல்சன், மாவட்ட செயலாளர் ராஜாராம் ஆகியோர் கூறியதாவது:
எந்த பாட திட்டம் என்பது முடிவு செய்யப்படாத நிலை தொடருகிறது. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் ஜூலை 2 வது வாரத்தில் முதல் இடைத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் 15 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டதால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு ஆகஸ்ட் முதல் வாரம் முதல் இடைத்தேர்வு நடத்தப்படுகிறது. 6 முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படாததால் நேரடியாக அவர்கள் காலாண்டு தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக