கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளுக்கு இன்னும் உரிய தண்டனை கிடைக்காமல் இருப்பதாக குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்
கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.
இட நெருக்கடி
நெருக்கடியான இடத்தில் ஒரே கட்டிடத்தில் ஸ்ரீகிருஷ்ணா மழலையர் பள்ளி, சரசுவதி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவந்த அந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் செல்வதற்கு ஒரே ஒரு படிக்கட்டு வழி மட்டுமே இருந்தது.
தீவிபத்து ஏற்பட்டவுடன் படிக்கட்டு வழியாக அனைத்து குழந்தைகளும் இறங்க முயற்சித்துள்ளனர். குறுகிய வழி என்பதால் அதற்குள் தீ வேகமாக பரவியதில் 94 பிஞ்சு குழந்தைகளும் கருகி இறந்தனர், நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
ஏழு ஆண்டுகள்
அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ம் தேதியை துக்க நாளாக அனுசரிக்கும் பெற்றோர்கள் மரணமடைந்த குழந்தைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். இன்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெஞ்சை உலுக்கும் கொடூரச்சம்பவம் நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் குற்றவாளிகளுக்கு இதுவரை உரிய தண்டனை கிடைக்கவில்லை என்பது பெற்றோர்களின் ஆதங்கம்.
தீ விபத்திற்கு காரணமான பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி, தலைமையாசிரியர் சாந்தலெட்சுமி, சமையலர் விஜயலட்சுமி, வசந்தி, தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி மற்றும் முன்னாள் வட்டாச்சியர் பரமசிவம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் இருந்து தொடக்க கல்வி இயக்குநர் கண்ணன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, முன்னாள் வட்டாச்சியர் பரமசிவம். ஆகியோரை கடந்த ஆண்டு தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்து உத்தரவிட்டது.
இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 94 மாணவர்களின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப் படவேண்டியவர்களே என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். ஆண்டுகள் ஆனாலும் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் இன்று வரை அந்த கொடூர சம்பவத்தை நினைத்து கதறுவது கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கிறது.
தீ விபத்து நிகழ்ந்த உடன் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குழு அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விதிகளை அறிவுறுத்தியிருந்தது. இன்றைக்கு அவை கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டியது தமிழ்நாடுஅரசின் கடமையாகும். அப்பொழுதுதான் கும்பகோணம் தீவிபத்து போன்று மற்றொரு சம்பவம் நிகழாத வண்ணம் தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக