நெகமம் : கிணத்துக்கடவு அருகே செட்டியக்காபாளையத்தில், ஐந்து வகுப்பு கொண்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஓராசிரியர் மட்டுமே பணிபுரிவதால், மாணவர்கள் முழுமையாக பாடம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே உள்ளது, செட்டியக்காபாளையம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளிக்கு, ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த மே மாதம், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஓய்வு பெற்றார். மற்றொரு ஆசிரியர், விருப்ப ஓய்வு பெற்று சென்று விட்டார். தற்போது, பணிபுரிந்து கொண்டிருக்கும் சகுந்தலா என்ற ஆசிரியர், கூடுதல் பொறுப்பாக தலைமை ஆசிரியர் பணியையும் சேர்த்து பார்க்கிறார். இவர், ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு, பாடம் எடுக்கிறார்.
கடந்த ஆண்டு, 80 மாணவ, மாணவியர், இப்பள்ளியில் படித்தனர். ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த, 20 பேர், வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர். இந்த ஆண்டு, நான்காம் வகுப்பில் இரண்டு பேரும், ஐந்தாம் வகுப்பில் ஒருவரும் சேர்ந்துள்ளனர். முதல் வகுப்பில் எட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது, சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பொதுவான பாடங்கள் மட்டுமே எடுக்கப்படுவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படவில்லை. இருப்பினும், பாடங்களை அரசு வழங்கிய பின், இதே நிலை நீடித்தால், பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வேறு பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
இது குறித்து, சில பெற்றோர் கூறுகையில், ""ஆசிரியரை நியமிக்கிறோம் என, சில கல்வி அதிகாரிகளும், நியமித்து விட்டோம் என, சில கல்வி அதிகாரிகளும் சொல்கின்றனர். ஆனால், பள்ளிக்கு பாடம் எடுக்க, இது வரை ஓர் ஆசிரியர் மட்டுமே வருகிறார்,'' என்றனர்.
விரைவில் ஆசிரியர்கள்? : உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாரிமுத்து கூறியதாவது: இப்பள்ளி அருகிலுள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணிபுரியும் அருண்குமார் என்ற ஆசிரியரை டெபுடேஷனாக மாற்றம் செய்துள்ளோம். அதனால், இனிமேல் இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிவர்.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளை ஒன்றாக வைத்து ஓர் ஆசிரியரும், நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களை ஒரே வகுப்பில் வைத்து மற்றொரு ஆசிரியரும் பாடங்களை நடத்துவர். ஆசிரியர்களை அரசு நியமிக்கும் பட்சத்தில், புதிய ஆசிரியர்கள் இப்பள்ளிக்கு அனுப்பப்படுவர். இவ்வாறு மாரிமுத்து கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக