மாணவர்களின், பாடப் புத்தக சுமையை குறைக்கும் வகையில், அடுத்த கல்வியாண்டு முதல் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளுக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பாடப் புத்தகங்களை வழங்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு தகுந்தபடி, தேர்வு முறைகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளன. தமிழ், அறிவியல், கணிதம் என, எந்தப் பாடப் புத்தகமாக இருந்தாலும், ஆண்டு முழுவதும் தடிமனான பாடப் புத்தகங்களை, மாணவர்கள் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. காலாண்டுத் தேர்வுக்கு குறிப்பிட்ட பாடப் பகுதிகளும், அரையாண்டுத் தேர்வுக்கு காலாண்டுத் தேர்வுடன், அரையாண்டுத் தேர்வுக்கு உட்பட்ட கூடுதல் பாடப் பகுதிகளுடன் மாணவர்கள் படிக்க வேண்டும். முழு ஆண்டுத் தேர்வுக்கு, மீண்டும் ஒன்று முதல் இறுதிப்பாட தலைப்புகள் வரை அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்.
இதன் காரணமாக, மாணவர்களுக்கு தேவையில்லாமல் மன அழுத்தம் ஏற்படுவதுடன், ஆண்டு முழுவதும் அதிகளவில் பாடப் புத்தகங்களை சுமப்பதால், முதுகுத்தண்டு வளைந்து, கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வில், மாணவர்களின் முதுகுத்தண்டு பாதிப்பு, வகுப்பு வாரியாக அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதனால், மாணவர்களின் பாடப் புத்தக சுமையை குறைத்து, அதற்கேற்ப தேர்வு முறைகளிலும் மாற்றம் செய்யவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில், ஒவ்வொரு பாடத்திற்கும், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளுக்கும், மூன்று பிரிவுகளாக பிரித்து, சிறிய அளவில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் அமலுக்கு வந்ததும், தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படும். அரையாண்டுத் தேர்வில், காலாண்டுத்தேர்வுக்கான பாடப் பகுதிகளும், முழு ஆண்டுத் தேர்வில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு பாடப் பகுதிகளும் இடம் பெறாது. அந்தந்த தேர்வுக்குரிய பாடப் பகுதிகளிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படும்.
இந்த புதிய முறை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு அமல்படுத்துவது குறித்து, துறை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. முதல்கட்டமாக, பொதுத்தேர்வு வகுப்புகளை தவிர்த்து, இதர வகுப்புகளுக்கு மட்டும், புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக