சென்னை, ஜூலை 11: சமச்சீர் கல்வித் திட்டம் குறித்துத் தற்போதைய அரசு அமைத்த நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு உறுப்பினரும் தெரிவித்தத் தனிப்பட்ட கருத்துகளைத் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இப்போது சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளைப் பொருத்தவரை நிபுணர் குழு ஒன்றை அமைத்து முடிவுக்கு வரும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட நிபுணர் குழு, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் மற்றும் பாட நூல்களை ஆராய்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.பாட நூல்கள் தரமாக இல்லாததால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இரண்டாம் நாள் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.அப்போது, சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி மனு செய்த பண்ருட்டியைச் சேர்ந்த பெற்றோரான சேஷாசலம் சார்பில் வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் வாதாடினார்.அவர் கூறியதாவது: முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போதைய அரசில் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருப்பவர் சமச்சீர் கல்வித் திட்டம் சட்ட விரோதமானது என்று கூறுகிறார். சமச்சீர் கல்வித் திட்டமே சட்ட விரோதமானது என்று கூறும் அதே அதிகாரி, அந்தத் திட்டத்தைப் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் ஒரு உறுப்பினராக செயல்பட்டுள்ளார். திட்டமே சட்ட விரோதம் என்று கூறியவரிடம் இருந்து நடுநிலையான கருத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இந்த நிபுணர் குழுவின் கூட்டம் 4 முறைதான் நடந்துள்ளது. ஜூன் 17-ம் தேதி நடந்த முதல் நாள் கூட்டத்தில் நிபுணர் குழுவின் பணி என்ன என்பது பற்றி மட்டுமே பேசப்பட்டுள்ளது. கடைசி நாள் கூட்டத்தில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இடையில் நடந்த இரண்டு கூட்டங்களில் மட்டுமே சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களை ஆராய்வதற்கு நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு சுமார் 15 மணி நேர அவகாசம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய கால ஆய்வின் மூலம் சமச்சீர் கல்வி பாடநூல்கள் தரமற்றது என்ற முடிவுக்கு நிபுணர் குழுவால் எவ்வாறு வர முடிந்தது? உண்மையில், நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் முழு ஈடுபாட்டோடு ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படவில்லை.அதிகாரிகள் தயாரித்த அறிக்கையில் நிபுணர் குழு உறுப்பினர்கள் வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அதன் உறுப்பினர்களுக்கே காட்டப்படவில்லை என்று பிரபாகரன் கூறினார்.இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு: சமச்சீர் கல்வி தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை தொடர்ந்து விசாரணை நடைபெறும். அப்போது, நிபுணர் குழுக் கூட்டத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யும் முன்னும், வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் நிபுணர் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தெரிவித்தக் கருத்துகளை இந்த நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், நிபுணர் குழுவின் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து குறிப்புகளையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக