சென்னை : தேர்வு நடத்தி ஆசிரியர்களை தெரிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பல ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு 6,000 பேர் பணி நியமனம் செய்ய அறிவிக்கப்பட்டது. அதில் 5,800 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அதிமுக அரசு தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. சமச்சீர் கல்வியில் திருத்தம் கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது.
இதற்கிடையே தெரிவுப் பட்டியலில் இடம்பெற்ற பட்டதாரிகள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பட்டதாரிகள் நியமனத்தில் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தெரிவு செய்து வந்தது. அதன் அடிப்படையில், தற்போதும் தேர்வு நடத்துவார்களா அல்லது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் தெரிவு செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், தற்போதுள்ள சலுகைகள் தொடரும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தலின்போது தெரிவித்தார். அதனால், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தேர்வு நடத்தியே பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அதிகாரிகளின் கருத்தின்படி தேர்வு நடத்தலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது இதற்கிடை யே, ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட 5,800 பேரையும், சான்று சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள 12,000 பேரையும் இந்த ஆண்டில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், கல்வி அதிகாரிகள் கல்வித் தரத்தை முன்வைத்து, தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு மட்டும் முதல் மூன்று இடங்களில் அதிக அளவு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 வகுப்பிலும் அதிக அளவில் செண்டம் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டில் அதிக அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால்தான் இந்த அளவு தேர்ச்சி வீதம் கிடைத்துள்ளது என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுபோல 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் நியமிக்கப்பட்டால் தரமும், தேர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தெரிவு செய்யப் போவதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதை அரசும் வரவேற்றுள்ளது. இதையடுத்து, ஆசிரியர்களை தேர்வு செய்ய நடத்த வேண்டிய தேர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்ததும், அடுத்தபடியாக ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக