பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/19/2011

அரசு, மெட்ரிக் பள்ளிகள் கருத்தை ஏற்க முடியாது : ஐகோர்ட் தீர்ப்பில் விளக்கம்

சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மனோன்மணி, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறும் தனியார் பள்ளி மேலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: அறிக்கை தயாரித்ததில் பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா, முக்கிய பங்கு வகித்துள்ளார். அந்த அறிக்கையின் முடிவில், பாடப் புத்தகங்கள் அவசர கதியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கல்வியாண்டுக்கு அதை பயன்படுத்த முடியாது என்றும், அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய வேண்டியதுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதே பள்ளி கல்வித் துறை செயலர் தான், அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டத்தை ஆதரித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் வழிமுறைகளையும், அதற்கான பாடத் திட்டம், புத்தகங்களை ஆராயவும், குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குழுவின் விசாரணை வரம்பு பற்றி தவறுதலாக கருதப்பட்டுள்ளது. குழுவின் முடிவு மட்டுமல்லாமல், பாடத் திட்டங்கள், புத்தகங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தோடு ஒப்பீடு குறித்த குழுவின் கருத்துக்களையும் நாங்கள் படித்தோம். குழுவே தவறுதலாக வழிகாட்டப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் வழிமுறைகளை ஆராய்வதில் முக்கியமாக குழு ஈடுபட்டிருக்க வேண்டும். குழுவின் இறுதி அறிக்கையில், சமச்சீர் பாடப் புத்தகங்களை இந்த கல்வியாண்டில் பயன்படுத்த முடியாது என முடிவாகக் கூறியுள்ளது. குழு உறுப்பினர்களின் கருத்துக்களைப் பார்க்கும் போது, சமச்சீர் பாடத் திட்டம், புத்தகங்களை ஒட்டுமொத்தமாக அவர்கள் புறக்கணித்து விடவில்லை. குழு உறுப்பினர் ஒருவர், மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம் மற்றும் சமச்சீர் பாடத் திட்டம் இரண்டும் தேசிய பாடத்
திட்ட அமைப்பின் கொள்கைக்கு உட்பட்டு இல்லை எனக் கூறியுள்ளார். சில மாற்றங்கள், திருத்தங்கள், இணைப்புகள் இருக்க வேண்டும் என்றும் படிப்படியாக அமல்படுத்தலாம் என்றும் குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, சமச்சீர் பாடத் திட்டம், புத்தகங்களை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க, கைவிட வேண்டும் என, குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரே மாதிரியான கருத்து இல்லை. கோர்ட்டுக்கு தாக்கல் செய்த அறிக்கையில், ஒவ்வொரு உறுப்பினர் தெரிவித்திருந்த முழுமையான க ருத்துக்கள் இடம் பெறவில்லை எனத் தெரிகிறது. அவர்களின் கருத்துக்களைப் பார்க்கும் போது, சமச்சீர் பாடத்திட்டம், பாடப் புத்தகங்களை கைவிட வேண்டும் என பரிந்துரைக்கவில்லை. சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அப்படியிருக்கும் போது, திருத்தச் சட்டம் என்கிற போர்வையில், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் வகையில், அரசு செயல்படுவதை அனுமதிக்க முடியுமா?
திருத்தச் சட்டத்தின் விளைவை பார்த்தால், சமச்சீர் கல்விக்காக கொண்டு வரப்பட்ட பிரதான சட்டத்தை ரத்து செய்வது போலாகும். ஏற்கனவே பிரதான சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. நேரடியாக சாதிக்க முடியாததை, மறைமுகமாக சாதிக்க அரசு முயற்சித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டாலும், கோர்ட் உத்தரவை அந்தக் குழுவானது தவறாக பொருள் கொண்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை இந்த கல்வியாண்டில் பயன்படுத்த முடியுமா என முடிவு செய்யுமாறு, குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடவில்லை.
ஆனால், இந்த கல்வியாண்டில் பாடப் புத்தகங்களை பயன்படுத்த முடியாது என குழு முடிவுக்கு வந்துள்ளது. அதே முறையில், தமிழக அரசும் ஒரு நிலையை எடுத்துள்ளது. இந்த கல்வியாண்டில் புத்தகங்களை பயன்படுத்த முடியாது என, குழு உறுப்பினர் ஒருவர் கூட கருத்து தெரிவிக்கவில்லை. சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக, சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும் வகையில் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டம் செல்லும் என ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின், அதை நிறுத்தி வைக்கும் வகையில் திருத்தச் சட்டம் கொண்டு வர, அரசுக்கு அதிகாரமில்லை. திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்; இளையவர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். டாக்டர் முத்துக்குமரன் குழு, 2006ம் ஆண்டிலிருந்து கடுமையான முயற்சிகளை எடுத்துள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையையும், ஒரு நபர் குழு ஆராய்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்துள்ளது. எனவே, சமச்சீர் கல்வியை அவசர கதியில் அறிமுகப்படுத்தினர் என மாநில அரசும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் கூறுவதை ஏற்க முடியாது. சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை அமல்படுத்தவில்லை என, அரசு கூறியுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையின்மையால் மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? கல்வியாளர்கள் குழுவை அறிவிப்பதில், அதிகாரிகளை எதுவும் தடுக்கவில்லை. இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Dinamalar - No 1 Tamil News Paper


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக