சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்' என்ற பிரச்னை தொடங்கிய காலத்தில் இருந்து பிரச்னையாக பேசப்படும் விஷயம். லேட்டஸ்ட் பிரச்னை, சமச்சீர் கல்வியை ஆராய நியமிக்கப்பட்ட கமிட்டி பற்றியது.
இதுகுறித்து, பள்ளிகள், கல்வியாளர்கள், அதிகாரிகள் என பலதரப்பிலும் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:"சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில், அரசு தயக்கம் காட்டுவதற்கான காரணமே, அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்' என்பது முதல் குற்றச்சாட்டு. ஆனால், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டபோதே, "அதை வரவேற்கிறோம். அதே சமயம், அடிப்படை கட்டமைப்புப் பணிகளை முடித்த பிறகே, அதை அமல்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தியது அ.தி.மு.க.,ஆனால், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் போலவே, அவசரகதியில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, பாடத்திட்டத்துக்கும், பாடப்புத்தகங்களுக்கும் ஒரே நாளில் ஒப்புதல் வழங்கியது முந்தைய அரசு. ஒரே நாளில் இரு ஒப்புதலும் வழங்கப்பட்டதென்றால், எவ்வளவு தூரம், அந்தப் பாடத்திட்டத்தில் மனதைச் செலுத்தியிருக்க முடியும், என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
அவ்வளவு ஏன்? சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி தலைவர் முத்துக்குமரனே, முந்தைய அரசு கொண்டுவந்த பாடப்புத்தகங்களை கடுமையாக விமர்சித்தார். சமச்சீர் கல்வி தொடர்பான தற்போதைய வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள ராஜகோபாலனும், புதிய அரசின் நிலைப்பாடை விமர்சிக்கும் கல்வியாளர் வசந்திதேவியும் கூட, சமச்சீர் கல்வித் திட்டத்தின் வரைவு நிலையிலேயே, அதை எதிர்த்தவர்கள் தான்.முத்துக்குமரன் கமிட்டி, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது பற்றி 109 பரிந்துரைகளை அளித்தது. அதில், முந்தைய அரசு ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளின் எண்ணிக்கை, வெறும் நான்கு மட்டுமே.
அப்புறம் எப்படி, அது முழுமையான சமச்சீர் கல்வியாக இருக்க முடியும்?
ஒன்றிணைக்கப்படும் நான்கு பாடத்திட்டங்கள் மட்டுமின்றி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமும் தமிழகத்தில் இருக்கிறது. பத்தாம் வகுப்பு வரை அதில் பயிலும் மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2வில் மாநில பாடத்திட்டத்துக்கு மாறி, பொறியியில் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சுலபமாக நுழைந்துவிடுகின்றனர். அவர்களின் கல்வித்தரம் அந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது.இப்போதே பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன. காரணம், சமச்சீர் கல்வித் திட்டத்தில் தரம் குறைந்திருப்பது தான். சமச்சீர் என்பதே, கீழே இருப்பவர்களை மேலே உயர்த்துவதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, மேலே இருப்பவர்களை கீழே தள்ளிவிடுவதாக அல்ல.
அடுத்த குற்றச்சாட்டு, "சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி நியமிக்கப்பட்ட ஒன்பது நபர் குழுவில் கல்வியாளர்கள் இல்லை; இருப்பவர்களும் மாநில வழிக் கல்வித்திட்டத்தை நடத்துபவர்கள் அல்ல' என்பது. இதுவும் உண்மையில்லை. ஜெயதேவ் செயலராக உள்ள டி.ஏ.வி., கல்விக் குழுமத்தின் கீழ், மாநிலப் பாடத்திட்டத்தில் இரண்டு பள்ளிகள் செயல்படுகின்றன. விஜயலட்சுமி சீனிவாசன், தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் சேவா சதன் பள்ளியின் (மாநில பாடத்திட்டம்) ஆலோசகராக இருக்கிறார். திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஊரறிந்த கல்வியாளர். மற்ற உறுப்பினர்கள் அனைவரும், கல்வியாளர்கள், கல்வித் துறை அதிகாரிகள், இத்துறையில் பழுத்த அனுபவம் உள்ளவர்கள்.
கடந்த ஆட்சியில் அமைந்த முத்துக்குமரன் கமிட்டியில் கூட, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் கிருஸ்துதாஸ், ஏற்காடு மான்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜார்ஜ் ஆகியோர் தானே நியமிக்கப்பட்டிருந்தனர். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய, 2007ல் நியமிக்கப்பட்டவரும், விஜயகுமார் என்ற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தான். அவர் ஒன்றும் கல்வியாளர் இல்லையே.
அடுத்த ஆண்டு அமைக்கப்பட்ட, நான்கு பேர் கொண்ட கல்வியாளர்கள் குழுவில் மூன்று பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் நால்வர் என, அனைவரும் கல்வித் துறையில் அதிகாரிகளாக இருந்தோர் தான். 2010ல் அமைக்கப்பட்ட பொதுக் கல்வி வாரியத்தின் 13 உறுப்பினர்களில் ஏழு பேர், கல்வித்துறை அதிகாரிகள். ஒரே ஒருவர் மட்டுமே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மீதமுள்ள ஐந்து பேர், தனியார், குறிப்பாக, அதிக கட்டணம் வசூலிக்கும் பெயர் பெற்ற கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் தான்.
அடுத்த குற்றச்சாட்டு, தற்போதைய குழுவும் பொதுமக்களிடமோ, பள்ளிகளிடமோ கருத்து கேட்கவில்லை என்பது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் அவ்வாறு வற்புறுத்தப்படவில்லை என்பது ஒருபுறம். இருந்தும், தங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட அத்தனை கருத்துக்களையும் ஆராய்ந்து தான் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது குழு. கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வது காமெடி இல்லை என்பது, சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அந்தக் குழுவினருக்கு தெரியாததல்ல.
நமது குட்டு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முந்தைய ஆட்சியாளர்கள் போடும் கூப்பாடு தான் வழக்கும், வாய்தாவுமாக வந்திருக்கிறதே தவிர, மாணவர்கள் மீதான அக்கறை அல்ல. மாறாக, மறுசீரமைக்கப்பட்ட சமச்சீர் கல்வியை புதிய அரசு அமல்படுத்தும்போது, அது, அகில இந்திய தரத்துக்கு மாணவர்களை உயர்த்துவதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.எது எப்படியோ! மாணவர்களின் எதிர்காலத்தில் யாரும் விளையாடாமல் இருந்தால் சரி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக