சென்னை : தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் திறன்களை தொடர் மதிப்பீடு செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது. தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது முதல் 5ம் வகுப்பு முடிக்கும்போது ஒவ்வொரு வகுப்பிலும் எப்படி படித்தார்கள். என்னென்ன கற்றுக் கொண்டுள்ளனர் என்பது முக்கியமாக கருதப்படுகிறது. இது தவிர குழந்தைகளின் திறன் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதும் முக்கியம். இதை கண்டறிவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம்(என்சிஇஆர்டி) ஒரு திட்டம் வகுத்தது.
அந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கப் பள்ளிகளில் 1 மதல் 5 வரை படிக்கும் குழந்தைகளின் கல்வியை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. என்சிஇஆர்டி தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் தொடக்க கல்வி குறித்த தொடர் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இந்த தொடர் மதிப்பீடு செய்யும் பணி ஆகஸ்ட் முதல் தேதியான இன்று தொடங்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் 33326 உள்ளன. இவற்றில் 1 முதல் 5ம் வகுப்புகளில் 6 லட்சத்து 20000 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த குழந்தைகளின் கல்வியை ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு செய்ய உள்ளனர். குழந்தைகளின் திறன்கள், பாடம் படிக்கும் திறன், கற்றல் திறன், பேசுதல், எழுதுதல், போட்டிகளில் பங்கேற்றல், ஓவியம் வரைதல், இசை, விளையாட்டு ஆகியவற்றில் உள்ள திறன்கள், குழந்தைகள் என்னென்ன நற்பண்புகளை கற்றுக் கொண்டனர் என்பவை உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சி கண்டறியப்படும்.
இது தவிர கல்வி மூலம் ஆசிரியர்கள், பெற்றோர் எப்படி மேம்பாடு அடைகின்றனர் என்பதையும் மதிப்பீடு செய்ய உள்ளனர்.
இந்த திட்டம் கடந்த ஆண்டு பரிட்சார்த்தமாக 2 மாவட்டத்தில் செய்யப்பட்டது. அதில் திருப்திகரமான பலன் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தஞ்சாவூர், வேலூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று தொடங்குகிறது.
மதிப்பீடு திட்டம் மதுரையில் பயிற்சி
இதற்கான பயிற்சி முகாம் இன்று மதுரையில் தொடங்குகிறது. 4ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கும். முதலில் 24 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் ஒரு மாவட்டத்துக்கு 24 பேர் வீதம் பயிற்சி அளிப்பார்கள். மாவட்ட வாரியாக பயிற்சி பெற்றவர்கள் தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பின்னர் தொடர் மதிப்பீடு செய்யும் பணிகள் பள்ளிகளில் தொடங்கும். இந்த மதிப்பீடு இந்த கல்வி ஆண்டு முழுவதும் நடக்கும். இந்த மதிப்பீட்டில் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் எதுவும் வழங்காமல் 1 முன்னேற்றம், 2 நன்று, 3 சுமார் என்ற குறிப்பிட்டு மதிப்பீடு வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக