சொந்தச் செலவில், "ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சியளிக்கும் ஆசிரியர் ஜெயக்குமார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, ஒத்தப்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 200 மாணவர்கள் படிக்கின்றனர். அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு, ஆங்கிலம் என்றாலே பயம். கிராம மாணவர்களுக்கும், ஆங்கில மொழித் திறன் முக்கியம் எனக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான, "ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சி கொடுக்கிறோம். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் அதிகம் செலவு செய்து, தங்கள் குழந்தைகளுக்கு, "ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சியளிக்கின்றனர். இந்த வசதி கிராமப்புற மாணவர்களுக்கு இல்லை. ஆங்கிலம் ஒரு பாடமாக இருந்தாலும், அது ஏட்டுக் கல்வியாக உள்ளது. இது வாழ்க்கைக்கு உதவுவதில்லை. இதை மாற்ற, ஒரு தனியார் அகடமி மூலம் மாணவர்களுக்கு,"ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்றுக் கொடுக்க முடிவு செய்தேன். அதை, என் சொந்த செலவிலேயே துவங்கினேன். ஆங்கிலம் பேசுவதில், எவ்வித தயக்கமும் இருக்கக்கூடாது என்பதை குறிக்கோளாகக் கொண்டு, இந்த பயிற்சியை அளிக்கிறேன். மேற்படிப்புக்காக நகரங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது உதவும். மாணவர்கள், தங்களிடையே பேசிக்கொள்ளும் போதும் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாடும் போதும், ஆங்கிலத்திலேயே பேசிப் பழகச் சொல்கிறேன். ஆங்கில வாசனையையே அறியாத கிராமத்து மூதாட்டியிடம், ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் பேரன் ஆங்கிலத்தில்,"ஹாய் கிராண்ட்மா... வேர் ஆர் யூ கோயிங்' என்று பேசியதைக் கேட்டு, பூரித்த பாட்டி, சுருக்குப் பையில் உள்ள நூறு ரூபாயை கொடுத்தார். அந்தளவுக்கு, ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணம், ஆங்கிலத்தில் கதை சொல்லுதல், உரையாடல்கள் போன்ற அடிப்படைகளைக் கொண்டு ஆங்கிலம் கற்பிக்கிறேன். அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொடுக்க தனி ஆசிரியர்களை நியமித்து, பயிற்சிக்கென கால அட்டவணையில், தனி நேரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக