மதுரை: பத்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தின் சமூக அறிவியல் பாடத்தில் ஆங்காங்கே பிழைகள் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஒன்பதாம் வகுப்புக்கான வரலாறு முதல் பாடத்தில், நாகரிகம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற நாகரிகங்கள் என குறிப்பிட்டு, எகிப்து, சுமேரிய, ரோமன், கிரேக்க நாகரிகங்கள் பற்றி தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வரிசையில் உலகளவில் பழமையான இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரிகம், ஆரிய, திராவிட நாகரிகங்கள் பற்றி எதுவும் இல்லை. அதே பாடத்தில், ஹராப்பா நாகரிகத்தின் (சிந்து சமவெளி நாகரிகம்) காலம் கி.மு., 3250 முதல் கி.மு., 2750 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் உண்மையான காலகட்டம் கி.மு., 3500 முதல் கி.மு., 1500 வரை. பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் வரலாறு பகுதியில் முதல் பாடம், "ஏகாதிபத்தியம்.' இதில், விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் ஆண்டு 1857 என குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான ஆண்டு 1858. குடிமையியல் பாடத்தின் முதல் பாடம் தென்னாப்ரிக்க சுதந்திர போராட்ட வீரர் "நெல்சன் மண்டேலா.' அவரைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் சுதந்திரப் போராட்டத்தில் 26 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 27 ஆண்டுகள் என்பதே சரியானது. இவ்வாறு சில தவறுகள் இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக