தமிழகச் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்புகள் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.3,187 கோடி கூடுதல் நிதியை கல்வித் துறைக்கு ஒதுக்கியிருப்பதோடு, 14,377 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டமும், ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடர்பான அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இதேபோன்று 1,353 ஊரக நூலகர் பணியிடங்களை நிரப்புவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இவை நெடுநாள்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அறிவிப்பு ஆகும். அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து என்கிற இனிப்பான செய்தி, நடைமுறைக்கு வந்தால் மேலும் இனிப்பாக மாறும். ÷பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்பதால் பாடங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்கிற மனவருத்தம் அரசுப் பள்ளி மாணவர்களிடையே, அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடையே இருந்து வருகிறது. இந்த மாணவர்களில் சிலர் கூட்டமாக மாவட்ட ஆட்சியர் நடத்தும் குறைதீர் கூட்டத்துக்கு வந்து முறையீடு செய்யும் செய்திகளும்கூட பல தருணங்களில் வெளியாகியுள்ளன. ÷தற்போது அரசு மேற்கொண்டுள்ள முடிவின்படி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,682 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 5,790 பேரும் இடைநிலை ஆசிரியர்கள் 4,342 பேரும் நியமிக்கப்பட உள்ளனர் என்ற அறிவிப்பு உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. இருப்பினும், இந்த நியமனங்கள் அதிமுகவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போல, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்றால் மட்டுமே, அரசின் முயற்சி பலன் அளிப்பதாக அமையும் என்பதை இப்போதே சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ÷ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தும்போது, பொதுஅறிவிலும், கல்வி கற்பித்தலிலும் பயிற்சி உள்ளவர்களும், தாங்கள் படித்த பாடத்தை மறக்காதவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர், ஏதோ ஒரு தனியார் பள்ளியில் அதுநாள்வரையிலும் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர்களாக இருந்தனர் என்பது வெளிப்படையான உண்மை. ÷கடந்த திமுக ஆட்சியில், ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படாமல், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்படும் முறையைக் கையாண்டதால், பதிவு மூப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நியமனங்கள் நடைபெற்றன. ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வெறும் பதிவுமூப்பு உள்ளவர்களாக இருந்தனரே தவிர, ஆசிரியப்பணி அனுபவம் பெறாதவர்கள். ஐம்பது வயதுவரை ஏதோ ஒரு வேலை பார்த்தவர்கள். ஆசிரியப் பணியுடன் தொடர்பே இல்லாமல் இருந்தவர்களும், குடும்பத் தலைவியாக இருந்து பேரன், பேத்தி எடுத்தவர்களும்கூட பதிவுமூப்பு என்பதால் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கும் இன்றைய பாடத்திட்டத்துக்கும் தொடர்பே இல்லை என்பது மட்டுமல்ல, ஆசிரியப் பணியுடன் தொடர்பும் இல்லாதவர்கள். அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது மட்டும் முக்கியமல்ல. திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது அதைவிட முக்கியம். திறமையில்லாத ஆசிரியர்களை, குறிப்பாகக் கற்பித்தலில் ஈடுபடாமல் ஏதோ ஒரு தொழில் செய்துகொண்டோ அல்லது கணவரது வருமானத்தில் குடும்பம் நடத்திக் கொண்டோ இருந்தவருக்கு வெறுமனே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை தருவது என்பது எந்த வகையிலும் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாது. கடந்த திமுக ஆட்சியில் நடந்த வருங்காலச் சந்ததியையே பாதிக்கும் இத்தகைய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முந்தைய அதிமுக ஆட்சியில் செய்ததுபோல, தேர்வாணையம் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ÷அதேபோன்று 1,353 நூலகர் பணியிடங்களை நிரப்பவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நூலகர் பணிநியமனத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்காகப் பயன்படுத்த அரசு முனையுமேயானால், கல்விச்சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழக அரசுக்குக் கிடைக்கும். ÷இதைச்சொல்லக் காரணம் உள்ளது. தற்போது, அரசு மேல்நிலைப் பள்ளிகள் பலவற்றில் நூலகம் உள்ளது. அவை தலைமையாசிரியர் பொறுப்பில் உள்ளது. அவரோ அவற்றை பூட்டி வைத்திருக்கிறார். புத்தகங்கள் வழங்க ஆளில்லை. தற்போது அரசு நியமனம் செய்யவுள்ள 1,093 ஊரக நூலகர்களை, மாவட்டத்துக்கு 40 பேர் வீதம் மேல்நிலைப் பள்ளி நூலகங்களின் நூலகர்களாக நியமித்து, மாணவர்களுக்கு ஆலோசகர்களாகவும், உயர்கல்விக்கு வழிகாட்டிகளாகவும் செயல்பட வைக்கலாம். ÷பிளஸ் 2 தேர்வுக்குப் பின்னர் "என்ன படிக்கலாம்?' என்று தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு பல கல்வியாளர்களை அழைத்து வந்து உயர்கல்வி வாய்ப்புகளை விரிவாகச் சொல்கின்றன. இதேபணியை அரசு மேல்நிலைப் பள்ளிகளும் செய்ய வேண்டிய தேவை உள்ளது. கல்லூரிகளில் "பிளேஸ்மென்ட் செல்' எத்தகைய பணியைச் செய்கிறதோ, அதேபோன்று, அரசு மேல்நிலைப் பள்ளி நூலகங்கள், உயர்கல்வி உலகின் நுழைவுவாயிலுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு மாவட்டத்துக்கு 40 மேல்நிலைப் பள்ளிகளில் நூலகம், நூலகர் பதவி என்பது, 40,000 ஊரக மாணவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் தருவதாக அமையும். ÷இந்த நூலகங்கள் வாயிலாக, பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன் "ஆங்கில மொழிக்கூடம்' ஏற்படுத்தவும், அந்த மொழி வல்லுநர்கள், மொழிக்கருவிகள் உதவியுடன் நூலக வளாகத்தில் மொழிப்பயிற்சி அளிக்கவும் செய்தால், கிராமப்புற மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்படும். தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஆங்கில வழியில் படித்தால்தான் ஆங்கில அறிவு கிடைக்கும் என்கிற தவறான கருத்துத்தான் தமிழக நடுத்தர மக்களை அலைக்கழிக்கிறது. ஆங்கிலவழியில் படிக்காமலேயே, இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்தபடி, தமிழ்வழியில் படித்தாலும் ஆங்கில மொழித்திறன் பெறமுடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தி, கிராமப்புற மாணவர்களின் வருங்காலத்துக்கு வெளிச்சம்காட்ட அரசு முன்வர வேண்டும். பாடத்திட்டத்தில் சமச்சீர் நிலையும், கற்பித்தலில் சமமின்மையும் உள்ள யதார்த்த நிலையைச் சமன்செய்ய இத்தகைய நடைமுறைகள் உதவும். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசின் நூறு நாள் ஆட்சியில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த முடிவு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதும், நூலகர்களை நியமிப்பதுமாகத்தான் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக